உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் ஏணி

39

திருப்பினான். அவன் சூழ்ச்சியறியாது, ஹைதர் நஞ்சி ராஜனை வற்புறுத்தி, குந்தி ராவிடமே அமைச்சர் உரிமைகளை வாங்கி அளித்தான்.

மாறா உறுதியுடைய ஹைதரின் நட்பைக் கூட இழந்து விட்டோமே என்ற துயரத்துடன், நஞ்சி ராஜன் தன் தாயகமான கென்னூருக்குச் சென்று ஓய்வுடன் வாழலானான். கென்னூரையடுத்துப் பெரிய பட்டணம், அர்க்கல் குரா, அஞ்சிடி துருக்கம் முதலிய கோட்டைகள் நஞ்சி ராஜன் குடும்ப மானியங்களாய் அமைந்திருந்தன. அவற்றின் மேற்பார்வைக்காக ,எழுநூறு குதிரை வீரரையும், இரண்டாயிரம் பயிற்சி பெற்ற காலாட்களையும், பயிற்சி முற்றுப் பெறாத நாலாயிரம் படை வீரரையும் மட்டுமே நஞ்சி ராஜன் இப்போது தன்னுடன் வைத்துக் கொண்டான்.

1755-ல் ஹைதர் திண்டுக்கல் மாவட்டத்தின் படைத் துறை ஆட்சியாளராக அமர்வு பெற்றான். இங்கே அவன் பிரஞ்சுப் படைத் தலைவர்களைத் தருவித்து, அவர்கள் மேற்பார்வையில், தன் படைகளை நன்கு பயிற்சி செய்வித்தான். அத்துடன், இவ்விடத்திலேயே அவன் ஒரு வெடி மருந்துச் சாலை அமைத்து, அதில் வெடிமருந்துச் சரக்குகளையும், படைக் கருவிகளையும் தொகுத்துத் திரட்டினான். இங்ஙனம், மைசூர் அரசு தளர்ச்சியுற்று வரும் நாட்களிலே, அத்தளர்ச்சியைத் தடுக்க, ஹைதர் அரும் பெரு முயற்சி செய்தான். இம்முயற்சியே, அவனை அச்சிறிய அரசின் அருகே ஒரு அரசாக்கிற்று. எவர் எதிர்ப்பும் இல்லாமலேயே, மக்கள் சக்தி, அவனைக் கன்னட நாட்டின் புகழ் ஏணியின் முதல் படியில் கொண்டு வந்து விட்டது.

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகள், அவனைத் திடுதிடுவென்று அப்புகழேணியின் படிகளில் ஏற்றி, புகழ் மேடையில் இடம் பெறுவித்தது.