வெற்றிப் பாதை
61
அவ்வப்போது இதை அனுப்பி வந்தாலும், சாமூதிரி இதை விரைவில் நிறுத்தினான். மைசூர் அரசியல் வாழ்வு வேறு திசையில் சென்றதாலும், மராட்டியர் படையெடுப்பாலும், ஹைதர் இப்பக்கம் திரும்பவில்லை. ஆனால், 1765-ல் மராட்டியப் படை திரும்பியவுடன், அவன் சாமூதிரியிடம் திறை கோரினான். சாமூதிரி மறுத்து விடவே, ஹைதர் படையெடுப்புத் தொடங்கிற்று.
முதலில் மைசூர்ப் படைகள் பேடனூர் வழி, மேல் கரையின் வடகோடி சென்றன. தளவாடங்களைக் கடல் வழி அனுப்பி விட்டு, ஹைதர் கரை வழியாகக் குடகு மீது படையெடுத்தான். ஒன்றிரண்டு குடி மன்னர் எதிர்த்து வீழ்ச்சியடைந்த பின், மற்றவர்கள் பணிந்தனர். கண்ணனூரிலுள்ள அலி ராஜன் பணிந்ததுடனன்றி, ஹைதருக்கு நண்பனாகி, அவன் படைகளுக்கு வழி காட்டி உதவினான்.
மலையாளக் கரைப் போராட்டத்தில், ஹைதர் படைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல அடர்ந்த சதுப்பு நிலக் காடுகள் தாண்டிப் படைகள் செல்ல வேண்டியிருந்தது. நாயர் வீரர்களும், அங்குலம் அங்குலமாக அவர்கள் முற்போக்கை மூர்க்கமாகத் தடுத்து நின்றனர். ஆனால், இறுதியில் படைகள் கள்ளிக்கோட்டையை அணுகின. சாமூதிரி இத்தடவை எளிதில் பணிந்து, நட்பாடினான். ஆயினும், திறை செலுத்துவதில், அவன் நாள் கடத்தி வந்தான். ஹைதர் சீற்றங் கொண்டு, சாமூதிரியையும். அவன் அமைச்சனையும் அவரவர் அரண்மனைகளிலேயே சிறைப்படுத்தினான். அப்போதும் செயல் சாயவில்லை. ஹைதர், அமைச்சனை வதைத்துத் துன்புறுத்தினான். தனக்கும் இந்தத் தண்டனை தரப்படக்கூடும் என்று எண்ணி, சாமூதிரி தன் அரண்மனைக்குத் தானே தீ வைத்து அதில் மாண்டான். நகரின் செல்வத்தைக் கொள்ளையிட்ட பின்,