உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

சமாளிக்க முடியாத ஹோவார்டு, விரைந்து பின் வாங்கி, திருவண்ணாமலையை அடைந்தான். அங்கிருந்து சென்னைத் தலைவர்களுக்கு, நேசப் படைகளின் தொகையும், முன்னேற்றமும் குறித்து, கலவரத் தகவல் அனுப்பினான். இதன் பயனாகத் திருச்சிராப்பள்ளியிலிருந்து 4,000 காலாள் வீரர், 800 வெள்ளையர், ஆர்க்காட்டு நவாபின் 3,000 குதிரை வீரர் ஆகியவர்களுடன் படைத் தலைவன் ஸ்மித் அனுப்பப் பட்டான்.

நிஜாமின் படைகளை நோக்க, ஆங்கிலேயர் படைகள் மிகக் குறைந்த தொகையுடையவை. ஆகவே, வெற்றி தன் பக்கம் என்பதில் அவனுக்கு உறுதி பிறந்தது. இப்புகழை ஹைதருடன் பங்கு.கொள்ள அவன் உள்ளூர விரும்பவில்லை. ஆகவே, ஹைதர் படைகளைச் சோழ நாட்டுக்கு அனுப்பி, உணவுப் பொருள், தளவாடங்கள் ஆகியவைகள் ஆங்கிலேயருக்கு வராமல் தடை செய்யும்படி அவன் வேண்டினான். ஹைதருக்கு நிஜாம் படையின் மீது நம்பிக்கையில்லை. ஆயினும், நிஜாமின் வற்புறுத்தலால், தன் மெய்க் காவல்ப் படை போக மீந்தவற்றை அனுப்பி விட்டான். நிஜாம் படைகள் சீர் குலைந்தால், மெய்க் காவல் படை கொண்டே சமாளிக்கலாம் என்று அவன் எண்ணினான்.

ஹைதர் எண்ணியது சரியாய்ப் போயிற்று. மைசூர்ப் படை சிறிதானாலும், கட்டுக்கோப்புடையது என்று ஸ்மித் கருதினான். ஆகவே, அதன் பக்கம் சென்று தாக்குவது போல் பாவனை செய்து, நிஜாம் பக்கமே சென்று மோதினான். ஆங்கிலேயர் துப்பாக்கிகள் வேறொரு புறமிருந்து படை வீரரிடையே அழிவு செய்தன. சந்தைக் கூட்டத்தில் பாம்பு புகுந்தால் ஏற்படும் கலவரம், நிஜாம் படையில் காணப்பட்டது. நிஜாம் தொலைவிலிருந்து, தன் வீரர்களின் ஓட்டத் திறமையைக் கண்டு வெட்கினான். மன்னன் அமைச்சனையும்,