உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியின் பதுங்கலும் பாய்தலும்

85

பணம் வழங்குவதாக ஹைதர் தெரிவித்தவுடனே, சிதறிய கடலையைப் பொறுக்குவதற்கு ஓடும் குரங்குப் படைகள் போல, அப் படைவீரர் சிதறிக் கலைந்தனர்.

மைசூரின் பழைய அரசர் மரபுக்கும், ஹைதருக்கும் சித்தல துருக்கம் ஒரு பகை முள்ளாய் இருந்து வந்தது. மராட்டியப் போரில், அதன் தலைவன் ஹைதர் உதவிக்கு வரவில்லை. அத்துடன் நிஜகல் கோட்டை முற்றுகையில், அவன் எதிரியின் ஆளாயிருந்து, ரகோபாவுக்கு வெற்றி தேடித் தந்தான். இனி மராட்டியர் ஓய்ந்து விடுவர் என்ற எண்ணத்துடன், ஹைதர் அவன் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், முந்திய தோல்வியின் அவமதிப்புக்கு ஈடு செய்யும் எண்ணத்துடன், மராட்டியர் ஹரிபந்த் பாரிகா என்ற தலைவன் கீழ் 60,000 குதிரை வீரரை அனுப்பினர். மராட்டியர் பண ஆசையறிந்த ஹைதர், துணைத் தலைவனை எளிதில் வசப்படுத்தி, பாரிகாவின் படை யைக் கலைந்தோடுவித்தான். இதன் பின், அவன் துங்கபத்திரா, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட சிற்றரசுப் பகுதிகளனைத்தையும், சித்தலதுருக்கத்தையும் பிடித்தடக்கினான். அஞ்சா நெஞ்சும், அடங்காப் பண்பும் கொண்ட சித்தல துருக்கத்தின் வீர மறக்குடி மக்களை, அவன் சேலர் என்ற பெயருடன், மைசூர்ப் படையின் தலைக் கூறாகச் சேர்த்துக் கொண்டான். அச்சிற்றரசின் தலைவனோ, சீரங்கப்பட்டணத்தின் மீளா வெஞ்சிறையில் தன் மீந்த வாழ்நாளைப் போக்கினான்.