பக்கம்:கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

41


நன்மை எது என்று தேர்வு செய்து, உலகுக்கு நல்லதையே செய்து, தங்களையும் அதே நேரத்தில் வளர்த்துக் கொண்டு, மனித இனத்தை வளப்படுத்திட கல்விதான் மூலகாரணமாகும் என்றார்!

எல்லாருக்கும் கல்வி கற்பிக்கும் கன்பூசியசின் பொது மக்கள் கல்வித்திட்டத்தின் நோக்கம் இதுதான். இதன் சாரம் என்னவென்றால், தன்னையும் தன் இனத்திற்குரிய கடமைகளையும் அறியக் கூடிய கல்வி முறைதான் அது என்கிறார்.

கன்பூசியஸ் கல்வி திட்டத்தின்படி, அறநூல்களும் கலைகளும் மிக முக்கியமானவை. கலைகள் என்பதில் ஆசாரங்கள் இன்னிசை, கவிதை இந்த மூன்றும் அடிப்படையானவை. ஆசாரங்கள் மனிதனின் மனதை ஒரே அளவாக இயங்க வைத்து, ஆசைகளை நிர்வகிக்கிறது; இதை நாகரிகப்படுத்தும் சக்தியாக விள்ங்குகிறது; மனிதனின் உணர்ச்சி பாவங்களை ஒழுங்கு படுத்துகிறது. இச்சையாதிகளைக் கட்டுப்படுத்துகிறது.

கவிதை, ஒழுக்கச் சக்தியாக விளங்கி, நமது குணத்தை நிதானப்படுத்தி, அறவுணர்ச்சிகளைத் தூண்டுகிறது. இவ்வாறு கன்பூசியஸ் நினைத்து இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

★ நமது குணம், கவிதையால் பண்படுத்தப்பட்டு, ஆசாரங்களால் நிலை நிறுத்தப்பட்டு, இசையால் பக்குவப்படுகிறது.

★ கவிதை எழுதும் பயிற்சி இல்லாமல் ஒருவன் சொல்லாட்சிகளை ஒழுங்காக, நிறைவாகச் செய்ய முடியாது.

க-3