பக்கம்:கபாடபுரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

129


அந்த அருவியின் நாதம். அருவியைக் கண்களால் அருகிலிருந்து காணாமல் சிறிது தொலைவு விலகிச் சென்று மரங்களின் மறைவிலோ, புதரிலோ, குன்றின் மறுபுறத்திலோ நின்று அந்த ஓசையை மட்டும் செவிமடுத்தால் யாரோ தொலைவிலிருந்து உரத்த குரலிலே மத்தளம் வாசிப்பது போலவே ஒலித்தது. அந்தத் தீவின் அதிசயங்களில் ஒன்றாக அதனையும் கூறினார்கள்.

'எல்லாக் கலைகளும் இயற்கையின் பல்வேறுவிதமான சங்கேதங்களிலிருந்துதான் பிறந்து விரிந்து பின் நோக்கமும், துறையும் கற்பிக்கப்பட்டனவாதல் வேண்டும்' என்று தன்னுடைய ஆசிரியர்கள் முன்பொரு சமயம் தனக்குக் கற்பித்திருந்த பிரத்யட்சவாக்கியத்தை இப்போது நினைவு கூர்ந்தான் சாரகுமாரன். நாத கம்பீரத்தின் குளிர்ந்ததுவும் காட்டு மூலிகைகள், வேர்கள், பூக்கள், பச்சிலைகளின் சுகமான வாசனை நிறைந்ததுவுமாகிய நீரில் குளித்தெழுந்த போது தேவர்களின் அமுதத்தை உண்ட உற்சாகம் அவர்கள் உடலில் நிறைந்திருந்தது. நீடாடி உடைமாற்றிக் கொண்டு அவர்கள் மீண்டும் எயினர் தலைவனைச் சந்திக்க வேண்டியிருந்தது. "இன்றைப் பகற்பொழுதையும், இரவையும் இங்கே கழித்துவிட்டு நாளைக் காலையில் இந்தத் தீவை விட்டுப் புறப்பட்டு யாத்திரையை மேலே தொடர வேண்டும்" என்று கூறியிருந்தான் முடிநாகன்.

எயினர் தலைவனின் அரசியல் உள் நோக்கங்களைப் பொதுவாக அறிய வாய்ப்பு ஏற்படும் முறையில் அதே சமயத்தில் தாங்கள் யார் என்று எயினர் தலைவன் அறிந்து கொள்ளவும் முடியாமல் தந்திரமாகச் சில வினாக்களை வினாவிப்பார்க்க வேண்டும் என்று அன்றைக்கு அவர்கள் நினைத்திருந்தார்கள். முதல் நாள் அவர்களை வரவேற்ற அதே இடத்தில் அதே பழைய சுற்றப் பரிவாரங்களோடுதான் இன்றும் எயினர் தலைவன் அவர்களை எதிர்கொண்டான். ஆனால் அவர்கள் நினைத்தபடி ஒரு காரியம் மட்டும் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/131&oldid=490057" இலிருந்து மீள்விக்கப்பட்டது