பக்கம்:கபாடபுரம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கபாடபுரம்


தொடரமுடியாமல் அங்கங்கே அவசியமான சில இடங்களில் நிறுத்தி உணவுப்பொருள் முதலிய தேவைகளை மரக்கலத்தில் நிறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இல்லையானால் எங்கும் நிறுத்தாமலே பயணத்தைத் தொடர்ந்திருப்பார்கள். ஊழியர்கள் மிகவும் சோர்ந்து களைத்துப்போயிருந்தார்கள். எப்பொழுது கரைசேரப் போகிறோம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் அவர்கள். முடிநாகனும் இளைய பாண்டியனும் ஒருவருக்கொருவர் ஆர்வத்தை மனம் விட்டுக் கூறிக்கொள்ளவில்லை என்றாலும் ஊழியர்களை ஒத்த அதே மனநிலையில்தான் இருந்தனர். தென் பாண்டிநாட்டுக்கரை நெருங்க நெருங்க அவர்கள் ஆர்வம் அதிகமாயிற்று. "யார் யாரிடம் எந்த எந்த அனுபவத்தை விவரித்துச் சொல்லவேண்டும் என்பதில் இளையபாண்டியருக்கு அதிகக் கவனம்வேண்டும். பாட்டனாரிடம் இசையினால் கொடுந்தீவு மறவர்களின் மனத்தை மாற்றி வெற்றி கொண்ட நிகழ்ச்சியைக் கூறக்கூடாது. எயினர் தீவின் கலஞ்செய் நீர்க்களத்தின் நுணுக்கங்களை அறிய மேற் கொண்ட இராஜதந்திர நிகழ்ச்சிகளைச் சிகண்டியாசிரியரிடம் கூறக்கூடாது. 'கொடுந்தீவு' நிகழ்ச்சிகளைப் பெரியபாண்டியரிடம் கூறினால் நாம் அவர்களை இசையால் மயக்கியது கோழைத்தனம் என்று கருதுவார் அவர். அதனால்தான் கவனமாயிருக்கவேண்டும் என்றேன்" என்றான் முடிநாகன். இளையபாண்டியனும் அவன் கூற்றை மறுக்காமல் ஒப்புக்கொண்டான்.

பொருநை முகத்துவாரத்தை ஒட்டினாற்போலிருந்த சிறுதுறைமுகத்தை நெருங்கி மரக்கலம் நங்கூரம் பாய்ச்சப்படுகிற நிலையை அடைந்தபோது சொந்த மண்ணில் இறங்கப் போகிறோம் என்ற ஆர்வம் மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. துறையில் இருந்தவர்களும், துறை ஊழியர்களும் ஆர்வத்தோடு இளையபாண்டியரின் மரக்கலத்தைச்சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். செய்தியை அரண்மனையிலுள்ளவர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒருவன் அரண்மனைக்கு விரைந்தான்.

துறைமுகம் எங்கும் இளையபாண்டியர் திரும்பிவந்து விட்ட செய்தி ஒரு பரபரப்பையே உண்டாக்கியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/162&oldid=490090" இலிருந்து மீள்விக்கப்பட்டது