பக்கம்:கபாடபுரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

கபாடபுரம்

பெரிய பாண்டியரைக் காண்பதாக அவனிடம் கூறிச் சென்றார். அப்படிச் செல்லும்போது குறிப்பறிந்த சாரகுமாரன் அவருடன் செல்லவில்லை. சிகண்டியாசிரியரைக் கண்ணுக்கினியாளின் தெய்விக இசையைக் கேட்கச் செய்துவிட்ட பெருமையில் இருந்தான் இளையபாண்டியன். பாட்டனாரிடம் சிகண்டியார் விபரீதமாக எதுவும் கூறிவிடமுடியாது என்பதில் அவனுக்கு நல்ல நம்பிக்கையும் இருந்தது.

சிகண்டியார் பெரியபாண்டியரைச் சந்திக்கச் சென்ற போது பெரியபாண்டியர் எதற்காகவுமே சிறப்பான காரணத்திற்காக அவரைக் காண விரும்பியதுபோல் பேசாமல் பொதுவான பல செய்திகைள் பற்றிப் பேசினார். இசை நூல்கள் இளையபாண்டியனின் இசைப் பயிற்சி, குருகுலவாசத்தை முடித்து அவனுக்கு அரசியல் அனுபவங்களை உணர்த்த வேண்டியிருக்கிற சமயம் இது என்ற தன் உட்கிடக்கை, எல்லாவற்றையும் பற்றிக் கூறிக்கொண்டே வந்தவர் இறுதியில் இளையபாண்டியனும் அவரும் தேரில் போயிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுச் சிகண்டியாரின் முகத்தைக் கூர்ந்து நோக்கினார்.

"ஓ! அதுவா? நெய்தற் பண்ணைப் புதுப்புது நுணுக்கங்களுடன் பாடும் பாண்மகள் ஒருத்தி கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் இருப்பதாக அறிந்து காண்பதற்குச் சென்றோம். அந்தப் பாண்மகளின் குரல் அற்புதமாயிருந்தது. அவளுடைய குரல் இலக்கணங்களை மீறிய அழகுடைய தாயிருந்தது. அந்தக் குரலுக்கே ஒர் இலக்கணத்தைப் படைக்கலாம்போல அத்தனை அழகுடையதாயிருந்தது" என்று வியந்தவாறே பெரியபாண்டியருக்கு மறுமொழி கூறினார் அவர்.

"உங்களுக்கு முன்பே தெரிந்த அவளைக் காண இளையபாண்டியனை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா? அல்லது அவளை முன்பே அறிந்த இளையபாண்டியன் அவளைக் காண உங்களை அழைத்துச் சென்றானா?"

இதற்குச் சில கணங்கள் மறுமொழி சொல்லத் தயங்கினார் சிகண்டியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/172&oldid=490102" இலிருந்து மீள்விக்கப்பட்டது