பக்கம்:கபாடபுரம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

185


அழுது தீர்த்தாள் அவள். கடற்கரைக்கும் மனிதனுடைய சோகத்துக்கும் உலகு தொடங்கிய நாள்முதல் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேண்டும் போலிருக்கிறது! இல்லையானால் இரங்கலையும் சோகத்தையும், பேசும் நெய்தல் திணையை ஏன் கடற்கரையாக அமைத்திருக்கப்போகிறார்கள்? தன் உணர்ச்சியின் வேதனைகள் எல்லாம் தீரும்வரை அங்கிருந்து அழுதபின்பே புன்னைத் தோட்டத்திற்குத் திரும்பமுடிந்தது அவளால்.

முதல் முதலாக நகரணிமங்கல விழாவிற்கு வருகிற வழியில் சாரகுமாரனைச் சந்திக்க நேர்ந்ததுமுதல் பழைய நினைவுகளை ஒவ்வொன்றாக நினைக்க முயன்றாள் அவள். அப்போது கபாடபுரத்து முத்து வணிகன் என்று இளைய பாண்டியன் தன்னைப் பொய்யாக அறிமுகப்படுத்திக்கொண்டது நினைவுக்கு வந்தது அவளுக்கு. அப்போதும் அதற்குப்பின்பு சந்திக்க நேர்ந்த வேளைகளிலும் இருவருக்குமிடையே நிகழ்ந்த அழகிய உரையாடல்களை எல்லாம் தொகுத்து நினைவுகூர்ந்தாள். தேருலாவின்போது உலாக்கோலத்திலே சாரகுமாரனின் எழிற்கோலத்தைக் கண்ட காட்சி இன்னும் அவள் மனக்கண்களில் அப்படியே இருந்தது.

ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டே வந்தவளுடைய நினைவு அறுந்து சோகம் மீண்டும் தொடங்குகிற இடமாக வாய்த்தது முதியபாண்டியரும், சிகண்டியாசிரியரும் சேர்ந்துவந்து தன்னைச் சந்தித்த சந்திப்பை நினைவுகூருவது. அந்தச் சந்திப்பை நினைவுகூருதலே மற்ற எல்லா இனிய நினைவுகளையும் அழிப்பதாக இருந்தது. அவளுடைய இனிய அநுராக நினைவுகளை எல்லாம். மறக்கச் செய்யும் பேரிடியாக இருந்தது பெரியபாண்டியரின் வரவும் வந்து தன்னிடம் உரையாடிய கடுமையான உரையாடலும்.


31. யாழ் நழுவியது

கபாடபுரத்தின் அரசவையில் அன்று கோலாகல வெள்ளம். இடைச்சங்கப் புலவர்கள் யாவரும் வரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/187&oldid=490118" இலிருந்து மீள்விக்கப்பட்டது