பக்கம்:கபாடபுரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கபாடபுரம்


"கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் எல்லாப் பாணர்களோடும் தங்கியிருக்கிறோம்" - என்று அவளிடமிருந்து மறுமொழி கிடைத்தது. இந்த விஷயத்தில் இளைய பாண்டியனைக் கண்காணித்துக்கொள்ள வேண்டிய அந்தரங்க ஒற்றனாகவும் முதியபாண்டியர் வெண்தேர்ச் செழியர் அவனை நியமித்து வைத்திருந்ததனால் முடிநாகன் இவற்றைக் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. மேலே என்ன பேசுகிறார்கள் என்று முடிநாகன் கவனிக்க அவசியமில்லாமல் இளையபாண்டியன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளிடம் விடைபெற்றுக்கொண்டு தேருக்கு வந்துவிட்டான். எனவே முடிநாகனும் தேரை விரைவாக முன்னே விரிந்து கிடந்த வீதியில் செலுத்த வேண்டியதாயிற்று.

பின்னால் தங்கிய தேர்களும் அடுத்தடுத்து விரையலாயின. இளையபாண்டியர் வலுவில் வந்து பேசிவிட்டுச் சென்ற பேறு பெற்றவள் என்பதனால் அப்போது அந்தக் கூட்டத்திலிருந்த இளம்பெண்களுக்கு எல்லாம் கண்ணுக்கினியாள் மேல் பொறாமையாயிருந்தது. கண்ணுக்கினியாளோ மதுவுண்ட வண்டு போன்ற மயக்க நிலையிலிருந்தாள். யாழில் மீட்டத் தெரிந்த பண்களை எல்லாம் அப்போது தன் நெஞ்சில் மீட்டிக் கொண்டிருந்தாள் அவள். தேர்க்கோட்டத்திலிருந்து புறப்பட்ட தேருலா நகரை வளைத்துக் கிடந்த பெருவீதியைச் சுற்றிக்கொண்டு மறுபடி தேர்க்கோட்டத்தின் வாயிலுக்கு வந்து சேருவதற்குள் விடிந்தாலும் விடிந்துவிடுமென்று தோன்றியது.

கூட்டத்தில் பலர் தேர்க் கோட்டத்தின் மதிற்புறத்து மேடைகளிலும், மணல் வெளியிலும், மரக் கூட்டங்களின் கீழும் அமர்ந்துவிட்டனர். நகரம் சோதி மயமான தீபாலங்காரங்களினால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. எங்கே திரும்பினாலும் ஒளி. எங்கே செவி கொடுத்தாலும் இசைகளின் இனிய ஒலி. எங்கே கண்டாலும் அலங்காரம். எங்கே பார்த்தாலும் மக்கள் வெள்ளம். நிலா ஒளியில் கடலும் நீலமாகப் பொங்கி மின்னிக் கொண்டிருந்தது. மரக்கலங்களிலும் சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/48&oldid=489947" இலிருந்து மீள்விக்கப்பட்டது