பக்கம்:கபாடபுரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

"கபாடபுரம்" என்ற சொல் எந்தத் தமிழ் மகனையும் தலைநிமிர்ந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கியச் செல்வமும் செழித்து வளர்ந்த பெருநிலப் பரப்பின்தலைநகரம் கபாடபுரம். வரலாற்றுச்செய்திகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்ற கபாடபுரக் காலத்துச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள்.

பழந்தீவுகளையெல்லாம் வென்று தெற்குமா கடல் முழுதும் தன் ஆட்சியை செலுத்தும் பாண்டியப் பேரரசை நிறுவ விரும்பும் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியரின் அரசியல் ஆசையும் சிகண்டியாசிரியரால் பண்படுத்தப் பெற்ற இசையுள்ளமும் மென்மையும் படைத்த சாரகுமாரனின் இனிய கனவுகளும் ஒன்றோடொன்று மோதும்போது நம் உள்ளம் தடுமாறாமல் இருக்க முடியாது.

முதுமையால் உடல் தளர்ச்சியுற்றபோதும் உள்ளம் உருக்கினும் கடினமாய் அமைந்த வெண்தேர்ச்செழியர், இலக்கிய அறிவாலும் இசைப் பயிற்சியாலும் தன் பேரன் மென்மையுள்ளம் பெற்றிருப்பதைக் கண்டு மனங் கலங்கும் நிலை நம் உள்ளத்தைக் கவர்கிறது.

இந்த நல்ல நாவலை வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியருக்கு மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக.

சென்னை - கண. முத்தையா 21-4-67 - - தமிழ்ப் புத்தகாலயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/5&oldid=490126" இலிருந்து மீள்விக்கப்பட்டது