பக்கம்:கபாடபுரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கபாடபுரம்


முடிநாகனும் அந்தக் கருத்தை வரவேற்றுப் பாராட்டுவதுபோல் இளையபாண்டியரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். மணிபுரத்திலிருந்து இளையபாண்டியரைக் கோநகருக்கு அழைத்து வரும்போது-இடைவழியில் உதவிபெற்ற அந்தப் பெண்ணும் தன் பெற்றோர்களுடன் அதே கூட்டத்தில் இருந்தாள். அவள் அங்கே கூட்டத்தினிடையே அமர்ந்திருப்பதை முடிநாகன் பார்த்தான். சாரகுமாரனும் அவளைப் பார்த்திருக்க முடியுமென்று முடிநாகனால் அநுமானம் செய்ய முடிந்தது. அவளைப் பார்த்துவிட்டதன் காரணமாக-அவள் அக்கூட்டத்தில் பாடும் முறை வந்து அதையும் கேட்டுவிட்டுப் போகவேண்டுமென்ற ஆவலிலேயே இளையபாண்டியன் அங்கே தாமதம் செய்வதாக முடிநாகன் உய்த்துணர்ந்து கொண்டாலும் அதை இளையபாண்டியர் வாயிலாகவே வரவழைக்க விரும்பி அவரைப் பேச்சுக்கு இழுத்தான் அவன்.

"அரண்மனைக்குத் திரும்பலாமா? நேரமாகிறதே? பாட்டனார் ஒருவேளை நம்மை நினைத்து உறங்காமல் காத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ?"

"போகலாம்! இன்னும் சிறிதுநேரம் பொறுமையாக இரு" என்றான் இளையபாண்டியன். அவனுடைய கண்கள் அந்தக் கூட்டத்தினிடையே விண்மீன்களுக்கு நடுவே முழு மதிபோல் வீற்றிருந்த கண்ணுக்கினியாளைச் சுற்றிச் சுற்றி மீள்வதை முடிநாகன் கவனித்தும் கவனியாததுபோல் உள்ளுற நகைத்துக்கொண்டான். 'காதல் குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடிப்பது கூடாது' என்று கருதியவனைப்போல் வாளாவிருந்தான் அவன்.

அந்தக் கூட்டத்தில் 'கண்ணுக்கினியாள்' பாடும் முறை வந்தது. அமுதமாரி பொழிந்தாற்போல அவள் பாடியபோது இளையபாண்டியன் சிரக்கம்பம் செய்து இரசித்துக்கொண்டிருந்தான். அவள் கூத்திலும் வல்லவளாக இருந்ததனாலோ என்னவோ அக்கூட்டத்திலிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/76&oldid=489999" இலிருந்து மீள்விக்கப்பட்டது