84
கபாடபுரம்
என்று முடிநாகனும் குமாரபாண்டியனும் ஒரே சுருதியில் இணைந்து ஒலிக்கும் குரலில் பெரியபாண்டியருக்கு உறுதிமொழி கூறியும் அவர் அதற்காகப் பெரிதாக முகமலர்ந்து மகிழ்ச்சி காண்பித்து விடவில்லை.
"இதில் நீங்கள் காட்டும் தைரியத்தையும், ஆர்வத்தையும் பார்த்தே நான் அவசரப்பட்டு வியப்படைந்து விடுவேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. விளைவைக் கொண்டே என் முடிவுகள் எனக்குள் உருவாகும்..." என்று அழுத்தமாகக் கூறினார் பெரிய பாண்டியர். அன்று பகலில் புலவர் பெருமக்களான அவிநயனாரும், சிகண்டியாரும் பெரியபாண்டியரைச் சந்திக்க வந்தபோதுகூடச் சாரகுமாரனும், முடிநாகனும் உடனிருந்தனர். அப்போதும் பெரியவர் காலையிலிருந்த அதே மனநிலையில்தான் பேசினார்.
"புலவர்களே! பேரப்பிள்ளையாண்டானுக்கு அறிவிலும், கலையிலும், இலக்கியம், இலக்கணங்களிலும் ஞானமுண்டாக்குவதற்கு நீங்கள் படுகிற பாட்டைவிட அரசதந்திர ஞானத்தை மட்டும் உண்டாக்குவதற்கே நான் அதிகமாகப் பாடுபட வேண்டும் போலிருக்கிறதே? உங்களுக்காவது ஏடுகளும், சுவடிகளும், இலக்கண இலக்கிய நூல்களும் இருக்கின்றன. அவற்றை விவரித்துக் கற்பித்துவிடலாம். அரச தந்திரமோ நூல்கள் எவ்வளவு கூறினாலும் அதற்கப்புறமும், நிறைவடையாது மீதமிருக்கும் ஒருதுறை. மனிதனின் அறிவிலுள்ள நேரிய மாறுபட்ட எல்லா நுனிகளுக்குமேற்ற அத்தனை பேதங்களும் அரசதந்திரத்தில் உண்டு."
"மீன் குஞ்சுக்கு நீந்தத் கற்றுக்கொடுக்க வேண்டுவதில்லை. தங்கள் பேரப் பிள்ளையாண்டானுக்கு இவையெல்லாம் தானாகவே வரும்."
"பழமொழி நன்றாக இருக்கிறது" என்று மட்டும் சுருக்கமாக மறுமொழிகூறிச் சிரித்தார் முதியபாண்டியர் வெண்தேர்ச்செழியர். பெரியவரின் இந்தப் பேச்சுக்களையும்,