பக்கம்:கபாடபுரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

97


சமீபமாக இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. உப்புக் காற்றும் மெல்ல மெல்ல உட்புகுந்து அலைவதை அவர்கள் உணர்ந்தனர். இறுதியில் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஒரு பாறைச் சரிவில் வெளியேறுகிறாற்போல் அமைந்திருந்தது அந்த வழி. உள்ளேயிருந்து வருகிறவனுக்குத்தான் வெளியேறியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தில் அதன் வழியே வெளியேற முடியுமென்பது தெரியுமே ஒழியப் புன்னைத் தோட்டத்தின் பக்கமிருந்தோ, வெளியே கடற்புறத்திலிருந்தோ பார்க்கிறவனுக்கு அந்தப் பாறையருகிலிருந்து அவுணர் வீதி முரசமேடைவரை போய்ச் சேருவதற்கேற்ற சுரங்க வழி ஒன்று உள்முகமாகச் செல்லும் என்று கற்பனை கூடச் செய்யமுடியாதபடி இருந்தது.

பாறைக்கு மிக அருகே கடலில் படகுகள் நிற்கவும் புறப்படவுமான சிறு துறை ஒன்று யிருந்தது. தென்பழந்தீவுகளிலிருந்து இரகசியமாகத் தேடி வருகிறவர்களை அவுணர் வீதிக்கு அழைத்துச் செல்லவும், அதேபோல அவுணர் வீதியிலிருந்து தென்பழந்தீவுகளுக்குக் கடத்திக் கொண்டுபோக வேண்டியவற்றைக் கடத்திக் கொண்டுபோகவும் இந்த இரண்டாவது வழி பெரிதும் பயன்படும் என்று தோன்றியது. பொருத்தமறிந்து இடமறிந்து அவுணர்கள் இந்த வழியை அமைத்துக் கொண்டிருக்கும் சூழ்ச்சியை வியப்பதைத் தவிர வேறொன்றுமே செய்யத் தோன்றவில்லை. படிகளில் ஏறி வெளியே பாறைச் சரிவில் கால் வைத்ததும் எதிரே பேயறைந்தாற்போலக் கண்ணுக்கு எட்டியதுரம் கடல் தெரிந்தது. முன்பின் அந்த வழிகளில் வந்து பழகாத புதியவர்களுக்குத் திடீரென்று கடல் அந்தப் பாறையையும் அதில் நிற்கும் தன்னையும் விழுங்க வருவதுபோல் அச்சம் தோன்றும்படி செய்யவல்லது அந்த இடம்.

விடியல் வேளை நெருங்கிக்கொண்டிருந்ததனால் சாரகுமாரனும், முடிநாகனும், அரண்மனைக்குத் திரும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/99&oldid=490023" இலிருந்து மீள்விக்கப்பட்டது