பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

21


மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவும்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், ஆஹா! இந்த அழகி சாரதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே, ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. சாரதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம் என்ன பாடுபடுமோ. பாவம், எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ. எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம், “நான் என்ன, மாரியப்பபிள்ளையா?” என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள, பெண்கள், “நான் குளத்தில், குட்டையில் விழுந்தாலும் விழுவேன், இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று பேசுகின்றனரோ, சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ, அவள் பாட்டி! என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து, வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான்.

“தம்பி! நீயே, இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது அவளுக்கு உடம்பு குணமாகட்டும்” என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன், சாரதா படுத்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.

நல்ல அழகான பட்டுமெத்தை! அதன்மீது சாரதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக்கொண்டிருந்த பக்கமாக. தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால்! “சாரதா! கண்ணே இதோ இப்படித் திரும்பு. இதோ பார், பரந்தாமன்,