பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

31


சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த சாரதா போய்விட்டாள். இந்த சாரதா வேறு பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை.

இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும் புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்புமுறை என்றும் கருதப்பட்டு வருகிறது.

“பெண் மகா நல்லவள் உத்தமி. நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற்கட்டைவிட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக்கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இதயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.

செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால் கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது. கிளி கூண்டிலிருக்கும்போது, கொஞ்சுவதாகக் கூறுதல் நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால் கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல்,