கப்பலோட்டிய தமிழன்
103
யாளரை, கடலிலே கப்பலோட்டிய கர்மவீரரை, புலவர்களின் வறுமை தீர்த்த புரவலரை தரிசித்துத் தங்கள் கடைசி வணக்கத்தைத் தெரிவித்தனர்.
சிதம்பரனார், தமது ஆவி பிரியும் முன்னர் கவியரசர் பாரதியாரின் தேசீயப் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டு உள்ளம் பூரித்தார்.
சிதம்பரனார், நாத்திகர் அல்லர்; பழுத்த ஆத்திகர். ஆனால், ஆளுக்கொரு தெய்வம், நாளுக்கொரு சடங்கு என்ற போலிச் சமய வாதிகளின் கொள்கை அவ ருக்கு உடன்பாடன்று. அவர் கண்ட சமயம், மக்கள் சமுதாயம்; அவர் போற்றிய வேதம், திருக்குறள். அவர் கடைப்பிடித்த சமயநெறி, எம் மதத்தையும் சம்மதமாகக் கொள்ளும் சன்மார்க்க நெறி. மற்றும், ஏழை எளியவர்களுக்குத் தொண்டு செய்வதே இறைவனுக்குக் செய்யும் வழிபாடாகக் கருதினார் வ.உ.சி.
உயிர் விடுந் தருவாயில், தேவாரத்தையோ, திருவாச கத்தையோ பாடச் சொல்லிக் கேட்பர் சைவர். அது போலவே, பிரபந்தம் ஓதக் கேட்பர் வைணவர். ஆனால், சிதம்பரனாரோ பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டுக்கொண்டே உயிர் நீத்தார். "எந்தையுந் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது மிந்நாடே.” என்று துவங்கும் பாடலும், "என்று தணியு மெங்கள் சுதந்தர தாகம்” என்ற முதலடிகொண்ட பாடலும்தான் வ. உ. சி. கேட்ட கடைசிக் கவிதைகள்.