பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கப்பலோட்டிய தமிழன்

வேதாந்த நூல்களிலும் ஒப்புயர்வற்ற ஒரு சிறந்த மேன்மையான நூல் என்று அவர் எழுதிய தனது சிவஞான போதம் என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார்.

தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற நூலிலே, இளம்பூரணர் இயற்றிய உரை மிக எளிமையாக இருப்பதால், அதனைப் பல சுவடிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, ‘இளம்பூரணம்’ என்ற நூலை வெளியிட்டவர் சிதம்பரம்பிள்ளை. இதற்கு ஒத்துழைத்த பேரறிவாளர் வையாபுரி பிள்ளை போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

தொல்காப்பிய பொருளதிகாரம் பகுதிக்கும் அதே போல ஒரு திருத்தமான பதிப்பையும் சிதம்பரம் வெளியிட்டார். அதன் எஞ்சிய பகுதிகளையும் சுவடிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கி, வையாபுரி பிள்ளை போன்ற அறிஞர்களின் ஆய்வறிவோடும் சிதம்பரம் பிள்ளை தனது பெயரோடு வையாபுரியார் பெயரையும் இணைத்து ஒரு பதிப்பாக தொல்காப்பியத்தை வெளியிட்டார்.

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நன்னிலை என்ற நூலுக்கும் சிதம்பரனார் எளிய உரை எழுதினார்

சைவ சித்தாந்தத்தில் பழுத்த ஞானமுடைய சிதம்பரம் பிள்ளை ‘சிவஞான போதம்’ என்ற சைவ தத்துவ நூலுக்கு நயமான, எளிமையான உரை ஒன்று எழுதினார்.