பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.உ.சிதம்பரம்

11

படித்த பின்பு, கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் கல்வியை முடித்தார். இவ்வாறு சிதம்பரம் ஆங்கிலத்திலும் தமிழறிவிலும் சிறந்து விளங்கினார்.

சிறுவயதில் துடுக்குத்தனம் செய்பவராக சிதம்பரம் இருந்ததால், அவரது தந்தை அடிக்கடி அடித்து விடுவார். அதனால், வீட்டைவிட்டு சிதம்பரம் ஓடி விடுவார். ஒரு சமயம் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி, தலையை மொட்டையடித்துக் கொண்டு பட்டினத்து அடிகளைப் போல துறவியாகி விட்டார். கட்டிய கோவணத்துடன் அவர் ஊர் ஊராகச் சுற்றி வந்தார். வெளியூரிலே இருந்து சிதம்பரம் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய ஒரு கடிதம் உலகநாதன்பிள்ளையின் கைக்குக் கிடைத்ததும், அவர் மதுரை மாநகரிலே திரியும் தனது மகனைச் சென்று பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சிதம்பரத்தின் குறும்புத் தனங்களை எப்படியும் குறைத்து அவரை நல்வழிப்படுத்த எண்ணிய உலகநாதன் பிள்ளை, ஒட்டப்பிடாரம் ஊரிலே உள்ள ஒரு வட்டாட்சி அலுவலகத்தில் தனது மகனைக் குமாஸ்தா பணியிலே சேர்த்தார். ஆனால், அந்த வேலையில் அவர் சில மாதங்களே பணியாற்றினார். பிறகு, வழக்குரைஞர் படிப்புப் படிக்க அவருக்கு ஆர்வம் மேலிட்டது. அதனால், தனது மகன் சிதம்பரத்தை அவர் தந்தை, திருச்சியிலே அவரது சட்டத்துறை நண்பர்களான கணபதி ஐயர், ஹரிஹர ஐயர் என்பவர்களது கண்காணிப்பிலே சட்டப்படிப்பைக் கற்க வைத்தார். கி.பி.1890- ஆம் ஆண்டில் சிதம்பரம் சட்டப்படிப்பில் தேர்வாகி, வக்கீல் பட்டம் பெற்று, வழக்குரைஞரானார். மீண்டும் அவர் தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்துக்கு வழக்கறிஞராகத் திரும்பி வந்தார்.