பக்கம்:கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



5. சுதந்திரப் புரட்சியில்
சிதம்பரனார், சிவா முழக்கம்!

‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற பாரதியார் பாடல் அப்போது பத்திரிகைகளிலும், அரசியல் மேடைகளிலும் பிரபலமாக எதிரொலித்துக் கொண்டிருந்த நேரம்.

பழமையும் - பெருமையும் வாய்ந்த இந்த நாடு, முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலேயரின் அடிமைத் தனத்திலே சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த அவலத்தை சிதம்பரனார் சிந்தித்தார்

ஒவ்வொரு துறையிலும் வெள்ளையர்களது பொருளாதாரச் சுரண்டல்களினால் இந்தியா அல்லல்படுவதையும், அந்த தொல்லை மிகு அல்லல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் சிதம்பரம் கண்டார். .

இந்திய மக்கள் எல்லாத் துறைகளிலும் பின் தங்கி வாழ்வது மட்டுமன்று, பஞ்சமும், வறுமையும், அவர்களைப் பாழ்படுத்தி, தமது முன்னோர்களின் பெருமைகளையும், புகழையும் மறந்தவராய் நலிந்து கிடப்பதைக் கண்ட சிதம்பரனார், இந்த அடிமைத் தளைகளை உடைத்தெறிய வீறிட்டெழுந்த அரசியல்வாதியாய் அரசியல் துறையிலே ஈடுபடக் கொதித்தெழுந்தார்.