பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பன் கண்ட நாடு முதலாவதாக நாடுபற்றி அவன் கொண்டிருந்த கருத்தைக் காணலாம். நாடு என்றால், மக்கள் பலர் கூடி வாழும் பரந்த நிலப்பரப்பு என்று கூறுவர். நாடு என்ப நாடா வளத்தன என்று திருக்குறள் (739) கூறுகிறது. பல்வேறு வளங்களும் நிறைந்து இருக்கும் ஒரே காரணத்திற்காக ஒரு நாட்டை நல்ல நாடு என்று கூறிவிட முடியுமா? இன்று உலகப் பொருளாதாரத்தில் மிகவும் பெரும் பகுதியைத் தன்னிடத்தே வைத்துள்ள நாடுதான் அணு ஆயுதம் பற்றி நினைந்து நினைந்து, இரவு பகல் உறக்கம் இன்றித் தவிக்கின்றது. பொருளாதாரமோ விளைபொருளோ ஒரு நாட்டைச் சிறந்த நாடு என்று கூறக் காரணமாக இருந்ததுமில்லை; இருக்கப் போவதும் இல்லை. அதனால் இவ்வினாவை மிகப் பழைய காலத்திலேயே அனுபவம் மிக்க சான்றோர் (அவ்வையார்) ஒருவர் எழுப்பி அதற்கு விடையும் அவரே கூறுகிறார். நாடு ஆகு ஒன்றோ! காடு ஆகு ஒன்றோ! அவல் ஆகு ஒன்றோ! மிசை ஆகு ஒன்றோ! எவ்வறி நல்லவர் ஆடவர் - - அவ்வழி நல்லை! வாழிய நிலனே (புறம்-187) ஏ நாடே! நீ நாடாக இருப்பினும், காடாக இருப் பினும், பள்ளமாக (அவல்) இருப்பினும் மேடாக (மிசை) இருப்பினும் கவலை இல்லை. எங்கே மக்கள் (ஆடவர்) நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கேதான் நீ நல்ல நாடு என்று கூறப் பெறுகிறாய்) எனவே "கேவலம் பொருள் வளம், வெற்றிச் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு, ஒரு நாட்டைச் சிறப்புடையது என்று கூறாமல், மக்கள் எங்கே நல்லவர்களாக