பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 185 ஐயங்கொள்ளவில்லை இராமன். ஆனால், புலனடக்கம் இல்லாத ஒருவனிடம் அருள் பாலிப்பது தவிரச் சினங்கொண்டு பயனில்லை என்பதை நன்கு அறிந்தவன் இராமன். இந் நிகழ்ச்சி இராமனின் அருளுடைமைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும். புலனடக்கத்தில் தலை நின்றவர்களின் சினம், தண்ணிரில் அம்பு எய்தால் ஏற்படுகின்ற பிளவுபோல் உடனே மாறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளமைக்கும் சிறந்த உதாரணமாகும். இராமனைச் சித்திரிக்கும் முறையில் புலனடக்கம் பயின்றவன் எத்தகைய பண்பாடுகளின் உறைவிடமாக இருப்பான் என்பதைப் பல்வேறு நிகழ்ச்சிகளைச் சித்திரிப்பதன் மூலம் வைத்துக் காட்டுகிறான் கவிஞன். தலைவனின் தரும சங்கடம் தரும சங்கடம் என்ற ஒன்றைப் பற்றிப் பலரும் பேசுகிறார்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை அறிந்தவர் சிலரேயாவர். ஒரு சூழ்நிலையில் இரண்டு செயல்கள் முன்னிற்கும். இரண்டும் அறச் செயல்களாகவே இருக்கும். அவற்றுள் ஏதாவது ஒன்றைச் செய்தே தீரவேண்டிய இன்றியமையாமை ஏற்படும். ஆனால் இரண்டுமே உயர்ந்தவையாக இருக்கும். ஏதாவது ஒன்றை மேற்கொண்டு செய்தால், மற்றொன்றை விட்டுவிட்ட, அல்லது ஒதுக்கிவிட்ட தவறு ஏற்படும். பலரும் வாழ்க்கையில் இத்தகைய சூழ்நிலையைச் சந்திக்காமல் இருக்க முடியாது. இத்தகைய சூழ்நிலை உருவானால் என்ன செய்வது? எதை ஏற்றுக்கொண்டு எதனைக் கைவிடுவது? என்பது எளிதில் முடிவு செய்ய முடியாது. அவனவன் தரம், தகுதி, பண்பாடு, சூழ்நிலை என்பனவற்றைப் பொறுத்தே இது முடிவு செய்யப்பட வேண்டும். தரும சங்கடமான நிலையில் குறிப்பிட்ட ஒருவன் ஒன்றைச் செய்தான் என்றால், பின்னே வருபவனுக்கு அது மேல்வரிச் சட்டமாக ஆகிவிடாது.