பக்கம்:கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்89


மாயையால் ஒரு சனகனைத் தோற்றுவித்துச் சிறைப்படுத்தித் தொல்லைப்படுத்துகின்றான். மாயா சனகனைக் கண்ட சீதை அழுது புலம்புகின்றாள். ஆயினும், மாயா சனகன் இராவணனை ஏற்றுக் கொள்ளும்படி சீதையிடம் சொன்ன அறிவுரையைக் கேட்டபின் சீதை உண்மை உணர்கின்றாள். தான் காண்பது உண்மையான சனகன் அன்று என்று தேறுகிறாள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பது ஆன்றோர் வாக்கு ஆதலால், இவன் சனகனாக இருந்தால் தருமம் அழியத்தக்கவைகளைக் கூறான்; வழி வழி வரும் முறைமைகளை மீறான்; பழி உண்டாகும்படி நடந்து கொள்ளமாட்டான். ஆதலால் உண்மையான சனகன் அல்லன் என ஐயப்பட்டாள்.

“நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார் வாய்ச் சொல்”

(திருக்குறள்-959)

என்ற திருக்குறள் நெறியோடு இந்நிகழ்வினை ஒப்பு நோக்குக

மாயா சீதை

சீதை எந்தச் சூழ்நிலையிலும் தான் கொண்ட உறுதியில் தளரவில்லை. அது மட்டுமன்று— இராவணனை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. இராம—இராவணப் போர் தொடர்ந்து நடக்கிறது. அதனைப் பற்றிய முழுச் செய்திகளையும் கூறுவதை நாம் விரும்பவில்லை. அவசியமும் இல்லை. நாகபாசத்தாலும், பிரமன் அம்பாலும் இராமன், இலக்குமணன் துயருறுதல்: இதைக் கண்ட சீதை துயருறுதல், முதலியன நிகழ்கின்றன. கடைசியாக சாம்பவான் சஞ்சீவி பர்வதத்தின் மூலிகைகளை கொணரச் சொல்கிறான்: அனுமன் மூலிகைகளைப் பறிக்கக் காலமாகும் என்று கருதி மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு வருகின்றான்.