பக்கம்:கம்பன் கலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மூரிய தேர்வலான் கம்பநாடன் கட்டிய கலைக் கோவிலில் ஒவ்வொரு பகுதியும் தனிச் சிறப்புடையது. பகுதி சிறிதாயினும் பெரிதாயினும் அது பற்றிக் கவலையில்லை. சிறிய பகுதியையும் மிக நுண்ணிய தன் கலைத் திறமையால் அக், கலைஞன் ஒப்புயர்வற்றதாகவே ஆக்கி விட்டான். பெரியதொரு மாளிகையை அமைக்கும் கலைஞன் அதிலுள்ள ஒவ்வொரு துணையும் எழில்பெறவே அமைக்கிறான் அல்லனோ? அதேபோன்று இலக்கியக் கலைஞனும் காப்பியத்தில் தோன்றும் சிறிய பாத்திரங்களையும் மிகவும் நுணுக்கமாகப் படைக்கிறான். பெரிய பாத்திரத்தின் படைப்பில் எத்துணைக் கவனம் செலுத்துகிறானோ அத்துணைக் கவனம் சிறிய பாத்திரத்தின் படைப்பிலும் செலுத்தப்படுகிறது. பெருங்காப்பிய ஆசிரியர் அனைவர்க்கும் இந்த இலக்கணம் முற்றிலும் பொருந்தும். மிகச் சிறியதும் அல்லாமல் மிகப் பெரியதும் அல்லாமல் இடை நிகர்த்தாய் விளங்கும் ஒரு பாத்திரமாவான் சுமந்திரன். சுமந்திரன் என்று கூறியவுடனேயே தசரதனுக்கு மிக நெருங்கியவன் என்பது விளங்கும். தசரதனின் மிக இன்றியமையாத நண்பன். அரசனுடைய தலைமைத் தேர்ப்பாகனும் அவனே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/56&oldid=770793" இலிருந்து மீள்விக்கப்பட்டது