பக்கம்:கம்பன் கலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கம்பன் கலை கண்டதுபோல மகிழ்ச்சியடைகின்றார்கள். இராமனைக் கண்டு பேசி வழிபட நேர்ந்தமையால், இனித் தங்கட்குப் பிறவி இல்லை என்று அவர்கள் மகிழ்கிறார்கள். ஆகவே, அவனைக் கண்டபோது சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் தங்கள் வினையைத் தீர்த்துப் பயன் பெற்றுவிடவேண்டும் என்று முனைந்து நிற்கின்றனர். இப் பெருமக்கள் அனைவரும், கல்வி, கேள்வி, ஞானத்தால் மிகமிக உயர்ந்தவர்கள் ஆவர். ஆதலால்தான் இராமனை வெறும் தசரத குமாரனாகக் கருதாமல் தங்கள் பிறவியின் பயன் என்றே கருதினார்கள் என்று அறிகிறோம். அறிவால் மேம்பட்ட இம் மக்கள் தங்களுடைய கூர்த்த மதியினால் ஆராய்ந்து, எதிரேயுள்ள மானிட உருவம், தம்மைப் போலச் சாதாரண மானிட வடிவமன்று என்பதையும், தங்களையெல்லாம் காத்தற் பொருட்டுக் கருணைக் கடலான முழுமுதல் பொருளே இம்மானிட வடிவைத் தாங்கி வந்துள்ளது என்பதையும் நன்கு அறிந்துள்ளனர். என்றாலும் என்ன? இராமனை முழுமுதல் பொருள் என்று அறிந்துகொள்வதற்குத் துணைசெய்த அவர்களுடைய பேரறிவு, அவன்மாட்டு ஒருமுகப்பட்ட சித்தத்தோடு, ஐக்கியம் செய்துகொள்ளச் செய்ததே தவிர ஒரளவு அவனிடம் அன்பு கொள்ளச் செய்ததே தவிர, தங்களை முழு அன்பில் கரைத்துக் கொள்ளச் செய்யவில்லை. முழுமுதல் பொருளை அறிந்து கொண்டதனால் அதனிடம் மதிப்பும், ஒரளவு அன்பும் அவர்கள்மாட்டுக் காணப்பட்டிருக்கலாமே தவிர, அந்த முழுமுதல் பொருளோடு இரண்டறக் கலந்து ஒன்றிப்போகின்ற இயல்பு (அநந்ய பாவம்) அவர்களிடம் இருந்ததா என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை. அறிவின் துணைகொண்டு முழுமுதல் பொருளை அறிவது வேறு. உணர்வின் துணைகொண்டு அப்பொருளினிடம் ஈடுபடுவது அல்லது கலந்துவிடுவது வேறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/86&oldid=770826" இலிருந்து மீள்விக்கப்பட்டது