பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7



மணிமேகலைக்கு வருவோம். அங்கே என்ன காண்கிறோம்? காய சண்டிகை என்பவள் யானைப் பசி எனும் நோயால் வாடினாள். அவள் மணிமேகலையிடத்திலே தனது பசி பற்றிப் பின் வருமாறு கூறினாள்.

“திருமால் தன் வடிவத்தை மறைத்துப் பூமியிலே இராமனாகத் தோன்றிக் கடலிலே அணை கட்டிய போது குரங்குகள் கொண்டுவந்து எறிந்த குன்றுகளை எல்லாம் கடல் விழுங்கி மேலும் மேலும் வேண்டி நின்றது போல” என்று தன் பசிக்கு உவமை கூறினாள்.


நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடலறு மூன்னீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு

(மணிமேகலை 17 — 10-14)

ஆக, இரண்டு காப்பியங்களை இப்போது கண்டோம். ஒன்று சிலப்பதிகாரம், மற்றொன்று மணிமேகலை. இவை இரண்டும் தமிழிலே உள்ள பழம் பெரும் காப்பியங்கள். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காப்பியங்கள்.

சங்க இலக்கியம் என்று சொல்கிறார்களே! அந்தச் சங்க இலக்கியத்திலே ஒன்று எட்டுத்தொகை. எட்டாகிய தொகை நூல்கள். “நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம் புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”.

எட்டுத் தொகையிலே ஒன்று கலித்தொகை “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று புகழப் பெற்றது. அதிலே குறிஞ்சிக் கலியிலே பின் வரும் பாட்டு காணப்படுகிறது :