பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வாளினால்; அரிந்தவரும் மானிடர்– அறுத்தவரும் அற்ப மானிடரே; அறிந்தும்– இக் கொடும் செயலை அறிந்த பிறகும்; உயிர் வாழ்வார்– அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்; இராவணனும்– இராவணன் என்ற பெயர் கொண்டவனும்; விருந்து அனைய வாள் ஒடும்– புதிதான வாளோடும்; விழித்து– தன் இருபது கண்களும் கொட்ட விழித்துப் பார்த்துக்கொண்டு; இறையும் வெள்காது– சிறிதும் வெட்கமில்லாமல்; இன் உயிர் கொடு– தன் இனிய உயிரை வைத்துக்கொண்டு; இருந்தனன்– உயிரோடு இருக்கிறான்.

என்று உரை செயா,
        நகை செயா எரி விழிப்பான்
“வன் துணை இலா இருவர்
        மானிடரை வாளால்
கொன்றிலர்களா, நெடிய
        குன்றுடைய கானில்
நின்ற கரனே முதலினோர்
        நிருதர்” என்றான்.

“காட்டிலே உனக்குக் காவலாக இருந்த கரன் முதலானோர் என்ன செய்து கொண்டிருந்தனர்? துணை வலிமையற்ற இருவரேயாக உள்ள அம் மானிடரைக் கொன்றனர் இல்லையா?” என்று கேட்டான். எப்படிக் கேட்டான்? கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான்.

என்று உரை செயா– என்று சொல்லி, நகை செயா– சிரித்து; எரி விழிப்பான்– தீப்பொறி பறக்க விழிப்பவனாய்; (சூர்ப்பணகையை நோக்கி) நெடிய குன்றுடைய கானில் நின்ற– நீண்ட மலைகளையுடைய காட்டிலே உனக்குக்