பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

கம்பராமாயணம்



மாண்டான்; விராதன் என்பவனைவிட வலிமை உடையவர் யார் இருக்கிறார்கள்? அவன்கதி என்ன ஆயிற்று? என் தம்பியான சுபாகுவும் என் தாயாகிய தாடகையும் இராமன் அம்புக்கு ஆற்ற முடியாமல் உயிர் விட்டனர். அவன் முன்நின்று போர் செய்ய முடியாமல் நான் உயிர் பிழைத்து ஓடிவந்து விட்டேன்; நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது; ஆற்றல்மிக்க அந்த இராமனோடு நீ மோதிக் கொள்கிறாய் என்று நினைக்கும்போது அச்சம் மிகுகிறது; அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு உன் ஆயுளை இழக்காதே!” என்று அறிவுரை கூறினான்.

“சீதையைக் கடத்திச் செல்வதில் யான் பின் வாங்க வில்லை; உன் குலத்தின் நலத்தைக் கருதித்தான் இவ்வளவும் சொல்கிறேன்; காமத்தால் கண்ணிழந்து நீ கருதியதை அடைய விரும்புகிறாய்; உன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கவில்லை; உன் அழிவுக்குத் தடை போடுகிறேன்” என்றான்.

“நீ அறிவுரை கூற அமைச்சன் அல்லை; நான் இடும் கட்டளையை ஏற்று நீ நடந்து கொள்ள வேண்டும்; நீ ஒரு வீரன், தலைமையிடும் கட்டளையைத் தலைமேல் தாங்க வேண்டுமே தவிர, மற்றைய நிலைமைகளை எல்லாம் நீ பேசக்கூடாது; உயிருக்கு அஞ்சி நீ ஏதேதோ உளறுகிறாய்”.

“என் அழிவுக்காக யான் சிறிதும் கவலைப்படவில்லை; மூத்தவன் என்பதால் மூதுரை வழங்குகிறேன்; கட்டளையிடு; ஏற்கிறேன்” என்றான்.