பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கம்பராமாயணம்



அதற்கு அவனால் விடை கூற முடியவில்லை; அவன் மூச்சு அடங்கியது.

“தம்பி! நம் தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச் செய்வோம்” என்றான்.

விறகுகள் கொண்டு வந்து தீ மூட்டி சடாயுவைக் கிடத்தி இராமன் எரியூட்டினான். மற்றும் ஈமச் சடங்குகள் அனைத்தும் செய்து முடித்தனர்.

அந்திப்பொழுது வந்து அணுகியது; இராமனும் இலக்குவனும் சடாயு உயிர் நீத்த இடத்தைவிட்டு நீங்கிச் செக்கர் வானம் நிறைந்த மேகம் தவழும் ஒரு மலையில் தங்கினர். இருள் மிகுந்தது; பிரிவு என்னும் துயர் இராமனை வாட்டியது. மனைவியை மாற்றான் கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், இராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவனாகிய சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின; இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன; இரவுப் பொழுதெல்லாம் தூங்காது பலவாறாக எண்ணித் துயருற்றனர்.

இளைய வீரனான இலக்குவன் இராமனிடம் அடக்கமாக “பொன் போன்ற சீதையைத் தேடாமல் ஈண்டு இருத்தல் தகுதியோ” என்று கேட்டான். புகழ்மிக்க இராமனும், அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிவோம் என்று கூறி மலைத் தொடரில் வெய்யில் மிகுந்த காட்டுக்குள் தேடிச் சென்றான். குன்றுகளையும் ஆறு