பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

189



அதுபோல நீங்களும் துணைபெற்று எடுத்த பணியை முடிக்க வேண்டும். அதற்குத் தக்கவன் சுக்கிரீவனும் அவன் வானர சேனைகளுமே ஆவர்” என்றான்; அவ்வாறே செய்வதாகக் கூறி மதங்க முனிவனது மலையைச் சேர்ந்தனர்.

மதங்க முனிவனது தவப்பள்ளி, கற்பக மரம் என்று சொல்லத் தக்க வளங்களைப் பெற்று விளங்கியது. அந்த ஆசிரமத்தில் நீண்டகாலமாய்த் தவம் செய்து கொண்டிருந்த முதியவள் சவரியைச் சந்தித்து அவள் நலம் விசாரித்தனர். அவள் இவர்களை இன்முகம் காட்டி இனிய கூறி வரவேற்றாள்; சுவைமிக்க காய்கனிகளைத் தந்து விருந்து படைத்தாள்.

“என் தந்தை போன்ற தலைவ! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். என் தவம் பலித்தது” என்று கூறினாள்.

“தாயே! வழி நடை வருத்தம் தீர, வகை வகையான உணவு தந்து உபசரித்தீர். நீர் வாழ்க!” என்றான் இராமன்

சுக்கீரிவன் தங்கி இருக்கும் ருசிய முக பருவதத்துக்குச் செல்லும் வழிகளை நினைவு கூர்ந்து, அவற்றை அவனிடம் கூறினாள்; பின்னர் அவள் முத்தி அடைந்தாள்.