பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

கம்பராமாயணம்



எழுப்பினர். அவன் வாய் திறந்து பேசவில்லை; அவன் தோற்றமே அவன் ஏற்றத்தை உணர்த்தியது.

“ஞான நாயகன் தேவி கூறினாள் நன்மை” என்றான்; அதனால் சீதையை அவன் கண்டு வந்ததை அறிந்தனர்.

“அவன் உடல் வடுக்கள், அவன் வீரச் செயல்களை விளம்புகின்றன; வானில் எழுந்த புகை, அவன் இலங்கைக்குத் தீ மூட்டியதைக் காட்டுகிறது; சீதை அவனுடன் திரும்பவில்லை; அது பகைவரின் படை வலிமையைக் காட்டுகிறது” என்று வாலி மைந்தன் அங்கதனும், கரடி வேந்தன் சாம்பவனும் உரைத்தனர்.

“கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்னகர்
அண்டர் நாயக! இனித் தவிர்தி ஐயமும்
பண்டுளதுயரும்என்று அனுமன் பன்னினான்.”

“அவள், தன் பொறுமையாலும் சீலத்தாலும் தன் கற்பின் திறத்தை நிலைநாட்டிவிட்டாள்” என்று கூறினான்; “அதனால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்; எனக்கும் அதனால் பெருமை உண்டாகி இருக்கிறது; தன்னைத் தனிமை செய்த இராவணன் வன்குல, தைக் கூற்றுக்குத் தர இருக்கிறாள்; வானரர் குலத்தை வாழ்வித்தாள்” என்று சொல்லி, அவள் இருந்த காட்சியை அநுமன் இராமனிடம் தெரிவித்தான்.

காவியத்தின் நீதியைத் தொடக்கூடிய நிலையில் அனுமன் கூற்று அமைந்தது.