பக்கம்:கரிகால் வளவன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

பலவகையான விளக்குகளை வருவித்து விற்றார்கள். பல யவனர்கள் அரண்மனையிலும் பிற இடங்களிலும் வேலை செய்து வந்தார்கள். கப்பல் வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.

உறையூரில் கரிகால் வளவன் ஒரு நியாய சபையை அமைத்தான். அந்தச் சபை அறங்கூறவையம் என்ற பெயரோடு விளங்கியது. மக்கள் அதில் தங்கள் தங்களுக்குப் பிறரால் நேர்ந்த துன்பங்களை முறையிட்டுக் கொள்வார்கள். அந்த அவையத்தில் கல்வி கேள்வி அறிவு ஒழுக்கம் இவற்றாற் சிறந்த முதியவர்களைக் குழுவினராக அரசன் நிறுவினான். பெரும்பாலும் அறுபது ஆண்டுகள் கழிந்த மாந்தர்களே அறங்கூறவையத்திலே இருந்தார்கள்.

எந்த வகையான வழக்கானாலும் நன்றாகக் கேட்டு ஆராய்ந்து முறை செய்யும் சிறப்பு அந்த அறங்கூறவையத்துக்கு அமைந்தது. அவையத்துக்குத் தலைவனாகக் கரிகாலன் இருந்தான். அங்கே வந்த வழக்குகளெல்லாம் நியாயமாகவே தீர்ந்தமையால் அந்த அவையின் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியது.

ஒரு நாள் சோழநாட்டின் ஒரு மூலையிலிருந்து சில முதியவர்கள் அறங்கூறவையத்தை நாடி வந்தார்கள். அறிவும் அநுபவமும் சான்ற முதியவர்கள் அந்த அவையத்தில் இருந்து நியாயத்தை நிலை நாட்டுகிறார்கள் என்பதைக் கேள்வியுற்றவர்கள் அவர்கள். அவர்கள் அறங்கூறவையத்துக்கு வந்தபோது வேறு ஒருவருடைய வழக்குப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/67&oldid=1205113" இலிருந்து மீள்விக்கப்பட்டது