பக்கம்:கரிகால் வளவன்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஒரு சார் அசைகின்றன. கடற்பக்கத்தைப் பார்த்தால் கப்பல்களில் உள்ள கூம்புகளில் கொடிகள் பறக்கின்றன. கள் விற்கும் இடத்தில் அதைக் குறிக்கத் தனியே கொடியை நட்டிருக்கிறார்கள்.

இப்படிப் பல கொடிகளும் கலந்து பல நிறங்களோடு விளங்கும் பட்டினத்தில் கப்பலில் வந்த அழகான குதிரைகள் ஒருபக்கம் நிற்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து பிற நாட்டுக்குப் போகவேண்டிய மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது. இமயமலையிலே பிறந்த மணியும் பொன்னும் ஓரிடத்தில் விற்பனையாகின்றன. மேற்கு மலையிலே விளைந்த சந்தனமும் அகிலும் ஓரிடத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பாண்டி நாட்டுக் கடலிலே எடுத்த முத்தும் பவளமும் ஓரிடத்தில் பளபளக்கின்றன. கங்கைக்கரையிலே வினைத்தபண்டம் ஒரு பக்கம்; காவிரிக்கரையிலே விளைத்த பொருள் ஒரு பக்கம்; ஈழ நாடாகிய இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள் ஒரு சார்; காழகமாகிய பர்மாவிலிருந்து வந்த பண்டம் ஒரு சார்.

இவ்வளவு பண்டங்கள் நிறைந்து கிடக்கும் ஆவணத்தில் நேர்மையான முறையில் வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வேளாளர்கள் நடுநிலையோடு வாழ்கின்றனர். கொலையும் களவும் இன்றி மக்கள் வாழ்கிறார்கள். பசுமாடுகளைப் பாதுகாக்கிறார்கள். புண்ணியச் செயல்களை இடையீடின்றிச் செய்து வருகிறார்கள்.

எங்கே பார்த்தாலும் வாணிகம். உலகில் உள்ள பண்டங்கள் அத்தனையும் இந்த அங்காடி -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிகால்_வளவன்.pdf/90&oldid=1205248" இலிருந்து மீள்விக்கப்பட்டது