பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

குறள் காலத்திற்கு முன்பு, இன்று போலவே கலைக்கூடங்களையே கழகம் என்னும் பெயர் குறித்திருக்கவேண்டும். பின்னர் நிலைமை மாறிவிட்டிருக்கிறது.

மற்றும், ஒர் இலக்கியக் கழகத்தைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால் அஃது அந்த இலக்கியக் கழகத்தைக் குறிக்கும்; ஒர் அரசியல் கட்சிக் கழகத்தைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால், அஃது அந்த அரசியல் கட்சியைக் குறிக்கும்; இஃது இக்கால உலகியல். இது போலவே, திருவள்ளுவர் திருக்குறளில் ‘சூது’ என்பதைப் பற்றிப் பேசும் போது, கழகம்-கழகம் என்றால், அது சூதாடும் இடத்தைக் குறிப்பதில் வியப்பென்ன இருக்கமுடியும்?

திருக்குறளில் கழகம் என்னும் சொல் ‘சூதாடு களம்’ என்னும் பொருளில் ஆளப்பட்டிருப்பதைக் கண்ட புலவர்கள், தம் நூல்களிலும் அவ்வாறே ஆளத் தொடங்கினர். ஆனால், நாளடைவில், சூதாடும் கழகங்கள் திருவள்ளுவர் போன்ற அறிஞர் பெருமக்களால் இழித்துக் கண்டிக்கப்பட்டமையாலும், அதனால் சூது பெரும்பாலான பொது மக்களால் புறக்கணிக்கப் பட்டமையாலும், சூதாடும் இடங்களைக் கழகம் என அழைக்கும் சொல்லாட்சி இன்று அறவே மறைந்து விட்டது. அறிஞர்கள் கூடும் சங்கங்களும் கல்வி பரப்பும் நிலையங்களும் திருக்குறள் காலத்திற்கு முன் போலவே இன்று கழகம் என அழைக்கப்படுகின்றன. இது தான் 'கழகம்’ என்னும் பெயரின் வரலாறாக இருக்கக்கூடும். இவ்வளவு அரிய கருத்துக் களையும் அறிவதற்குத் துணைபுரியும் திவாகரப் பாடலுக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும்.

மற்றும், இந்தக் காலத்தில் 'கிளப்' (CLUB) என்னும் ஆங்கிலச் சொல் பல்வேறு வகை இடங்களையும் சுட்டி