பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

இனி உங்க உடலிலே தங்கியிருக்கிற உயிர் உங்களுக்குச் சொந்தமில்லை !... அது எங்களுக்குச் சொந்தமாக்கும் ! இல்லையா, அம்மா ?...இல்லையா தங்கச்சி? இல்லையா, பூவழகி?... இல்லையா வேலப்பா?...” என்று ஆள் மாற்றி மாற்றிக் கேட்டான் ஞானபண்டிதன். வசந்தம் திரும்பி வருமென்று சொல்றது சரியாகப் போயிட்டுது !”...

“ஆமாம் !” என்று ஒரே குரலாக நான்கு குரல்கள் ஒலி கிளப்பின. ஆமோதித்தன.

பெரியவர் சோமசேகர் ஆனந்தக் கண்ணீருடன் எல்லோரையும் பார்த்தார். பிறகு, “தம்பி!” என்று அழைத்து, ஞானபண்டிதனின் கன்னங்களை ஆதரவுடன் வருடினார்.

“அப்பா !” என்று பாசமிகுதியுடன் கூவினான் அவன்.

பிறகு, அவர் அன்னபாக்கியத்தம்மாளையும் குழலியையும் நெருங்கினார். “அன்னபாக்யம் !... அம்மா குழலி !” என்று தேம்பினார். குரல் நடுங்கியது.

அவர்களும் தேம்பினார்கள்.

பூவழகியும் நீர் ததும்ப நின்றாள்.

பெரியவர் நிமிர்ந்து நடந்தார். என்றுமில்லாத அமைதிப் புன்னகையை இழையோடவிட்டபடி, ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த மகாத்மா காந்திஜியின் படத்தின் முன்னே மண்டியிட்டு வணங்கித் தொழுதார். கண்ணீர் மாலை நீண்டது.

போதி புத்தர், ஏசுபிரான், நபிகள் நாயகம் ஆகியோர் அவரை ஆசிர்வதித்திருக்க வேண்டும் !

அங்கு வந்து நின்றான் ஞானபண்டிதன். “எங்ககிட்ட பெர்மிஷன் வாங்காமல் நீங்க இப்படி வந்திடலாமா அப்பா ?” என்று ஒரு போடு போட்டான்! — பெரியவர் அமைதியுடன் ஆனந்தமாகப் புன்முறுவல் பூத்தார்!

மறுகணம், அங்கு சிரிப்பு — வெடிச் சிரிப்பு — சொல்லிச் சொல்லி வழிந்தது!

பொழுதும் விடிந்துவிட்டது!

க. ம.--11