பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நன்றியறிவுடன் நினைவுகூர்ந்தான். விஜயாவின் இடத்தில் உரிமைபற்றி, உறவுபற்றி, உள்ளம்பற்றி அன்பு மல்லிகாவின் துணை தனக்கு மகத்தான ஆறுதலாக அமைந்த தன்மையின் பொன்னான வாழ்வை - அவ்வாழ்வு கடத்திவிட்ட நூறு நாட்களைச் சிந்தித்தான்.

இப்படிப்பட்ட சிந்தனைகளினூடாக அவன் மனம் பின்னிக் கிடந்த நினைவுடனே தன் மனையை மிதித்தான். மிதித்ததும் அவனுக்கு வயிற்றைக்குமட்டியது. வீட்டினுள் பிரவேசித்தான்.

அங்கு மனையரசி மல்லிகா வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

சிவஞானத்துக்கும் வாந்தி வந்து தொலைத்தது.

புருஷனும் மனைவியும் இத்தகைய அவதியில் சில நிமிஷங்களை மறந்திருந்தனர்.

சிவஞானம் வாயைக் கொப்புளித்துவிட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு, மனைவியின் அருகே போய்க் கவலையுடன் நின்று, “காப்பி வேணுமா ?... சாப்பிட்டதெல்லாம் வந்து விட்டதே மல்லி !”... என்று ஆதரவு கனியக் கேட்டான். அவளது நெஞ்சையும் நெற்றியையும் தடவிக்கொடுத்தான். கழுத்தின் அடிப்புறத்தே துளிர்த்திருந்த வேர்வையை, குஞ்சு முடிகளை நீவித் துடைத்தான். மங்கலத்தாலி அழகுடன் ஒளிர்ந்தது.

மல்லிகா நாணம் பூத்து நின்றாள்.

அவள் வெட்கம் அவனுக்குப் புதிரானது.

“காப்பி வாங்கியாரட்டுமா, மல்லி ?”

“ஊஹூம் !”

“எலுமிச்சம்பழம் வாங்கியாரேன். பாதியை நறுக்கிச் சப்பினால், வயிற்றுக் குமட்டல் நின்னிடுமே !”

“ஊஹூம் !”

“ஐயையோ, நீ ஏன் எடுத்ததுக்கெல்லாம் “ஊஹூம்” பாட்டுப் பாடுறே? சரி, டாக்டரம்மாவையாச்சும் அழைச்சுட்டு வரட்டுமா”?

“ஊஹூம் !”