பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கற்பனைச்சித்திரம்



சந்திப்பு ஏற்படும். அப்போதும், தன் சஞ்சலத்தை மறக்க மாட்டான். பூபதியும் கோடீஸ்வரனும், ஆனந்தமாக விளையாடிவிட்டு வருகிறபோது, கண்டான்; நண்பன் என்ற முறையிலே, பூபதியின் சந்தோஷத்தின் சூட்சமத்தைப் பற்றியும், தன் சஞ்சலத்தைப் பற்றியும் பேசினான், அதுவும், மற்றப் பணக்காரர்களிடம் பேச முடியாதல்லவா "போடா சுடு மூஞ்சி" என்று கேலி பேசிவிட்டு, முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவனிடம் பேசுவதற்காக அதுவரை நிறுத்தி வைத்திருந்த மோட்டாரை, ஓட்டலானான் பூபதி. வளமில்லாத வியாபாரம் செய்து வந்த வரதராஜன் தன் "கூட்டாளி" காதரிடம், பூபதியின் செல்வம், செல்வாக்கு ஆகியவைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே நடந்தான். காதர், பணக்காரர் உயர்ந்தவர்கள், ஏழை மட்டம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவனல்ல. ஆகவே பூபதியைத் தன் நண்பன் புகழ்ந்தது பிடிக்கவில்லை எவன்தன் சாமார்த்தியத்தால், உழைப்பால், முயற்சியால், வாழ்கிறானோ அவனைத்தான் பாராட்டவேண்டுமே தவிர, பணத்தை யாரோ, எப்படியோ திரட்டிக் கொடுத்துவிட, அதை வைத்துக்கொண்டு படாடோப வாழ்வு நடத்துபவனைப் புகழ்வது, மதியீனம் என்பது காதர் கொண்டிருந்த கருத்து ஆகவே பூபதியின் மோட்டார், போகிற வேகத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, "கிடக்கிறான் தள்ளப்பா! என்ன புகழ்வது அவனை! மோட்டாரில் சவாரி செய்கிறானாம் அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத்தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை—சம்பாதிக்க முடியாது—சம்பாதிக்க வழி கிடையாது, என்னமோ, பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்து விட்டான், அகப்பட்டதை வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடுகிறான். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய புத்தி சாதுர்யத்தாலும், உழைப்பினாலும், இந்தச் சொத்துச் சேர்த்தானா; திறமைசாலி என்று இவனை புகழ, அவன் மட்டும், அந்தச் சீமானுக்கு மகனாகப் பிறக்காதிருந்தால், அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்! விரலை மடக்கு, அவனுக்குப் பிழைக்கும் மார்க்கம் இன்னது தெரியு-