பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூபதியின் ஒருநாள் அலுவல்

5



ருக்கிறான். சண்டைக்குப் பணம் திரட்டும் காரியமாகத்தான் போயிருக்கிறான். யுத்தநிதி உதவிக் கச்சேரிகளுக்காகத்தான் புவனேஸ்வரி, கல்யாணி ஆகியோரைத் தேடிச் சென்றானேயொழிய வேறு சொந்த வேடிக்கைக்கு அல்ல என்று பொன்னுராமரிடம் கூறப்பட்டது என்ற போதிலும், அவர் சமாதானம் அடையவில்லை. யுத்தவேலை நிதி திரட்டுவது என்று என்ன பேர் வேண்டுமானாலும் வைக்கட்டும், பூபதி இப்போது சதா சர்வகாலம், இந்தச் "சிரிப்புக் காட்டிகள்" இருக்கும் இடத்திலே உலாவுகிறான், அது தவறு, அது கூடாது, என்று கூறியபடி இருந்தார். அவருக்குத் தன் பாலியகால நினைவு. அவர் காலத்தில் யுத்த நிதி வசூலிக்கும் வேலை இல்லை; ஆனால் 'நவராத்திரி உற்சவ ஏற்பாடு' இருந்தது. பொன்னுராமர் அதிலே தீவிரமாகச் சேவை செய்தபோதுதான், திலகாவும், அன்னமும் அவருக்குச் சினேகிதமானது. "இலேசாக, படுக்கப் போகும் போது கொஞ்சம் உசத்தி சரக்கு" சாப்பிடக் கற்றுக்கொண்டதும் அந்தச் சமயத்திலேதான். ஆகவே பொன்னுராமர், யுத்தநிதி வசூல் வேலைக்குத்தான் போயிருக்கிறான் ஓயிலானந்தன் என்று சொன்னவர்கள், மீது சீறிவிழுந்தார், தனக்கு "நவராத்திரி" தன் மகனுக்கு 'யுத்தநிதி வசூல் வேலை' என்று மாறி இருக்கிறது என்று எண்ணினார்.

"ராஜாபோல, நிம்மதியாக இருக்க வேண்டியவன் வீடு இருக்கிறது அரண்மனை போல, தோட்டம் இருக்கிறது நந்தவனம் போல, என்ன குறை இவனுக்கு. எந்த வேலைக்குத்தான் இவனுக்கு இங்கே ஆள் இல்லை. நிம்மதியாக இருக்கக் கூடாதா? பகவான், நமக்கு ஒரு குறையும் செய்யவில்லை, சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறார். இதை அனுபவித்துக்கொண்டு, வீட்டோடு சந்தோஷமாக ஏன் இருக்கக் கூடாது? என்னமோ, பாடுபட்டு ஜீவிக்க வேண்டியவனைப்போல், சதா அலைச்சல், வீடு தங்குவதுகிடையாது; வேளா வேளைக்குச் சாப்பிடுவது கிடையாது; உடம்பைக் கவனித்துக்கொள்வது கிடையாது; கண்டவர்களிடம்