பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசங்க பூஷணம்!

59



மணி நமது ஆலமரத்தடியார் கோயிலில் தாசியாக போகிறாள். அந்த முத்திரை வைபவமும் நடைபெறப் போகிறது. உம்மிடம் உண்மையைச் சொல்லுகிறேன் இவ்வளவு "ஜோராக" ஏற்பாடுகளை ஜெமீந்தார் மாற்றிச் செய்வதற்குக் காரணமே, சிந்தாமணிக்கு அவருடன் இருக்கும் சிநேகிதந்தான். உம்ம பிரசங்க விஷயத்தைக் கூட ஜெமீன்தார் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டார். "நாட்டியக் கலையும் நாட்டு முன்னேற்றமும்" என்பது பற்றிப் பேசவேண்டும் என்று அருணாசல ஐயர், ஆனந்தமாகக் கூறினார். புலவருக்கோ விழா விமரிசையாக மாறுவது கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, என்றாலும், நாட்டியக்கலைபற்றி என்ன பேசுவது என்ற திகைப்பு உண்டாயிற்று. உடனே அது போய்விட்டது, சே! இது என்ன பிரமாதம்! சிலப்பதிகாரம் இருக்கவே இருக்கிறது என்று தைரியமடைந்து.

"சரி ஜெமீன் தார் இவ்வளவு அக்கரை எடுத்தது நமது அதிர்ஷ்டம் அவர் இஷ்டப்படியே நான் நாட்டியக் கலையைப்பற்றிப் பேசுகிறேன். அதில் என்ன தடை இருக்கிறது? அருங்கலைகளுள் அது ஒன்று. ஐயன் தில்லையில் அதனை விளக்குகிறான். அம்மைக்கும் அது ஆனந்தமே! பிரபஞ்சமே அரங்கம்! நாமெல்லாம் நாட்டியப் பதுமைகள் அவன் ஆட்டுவிக்கிறான்." என்றார் புலவர்.

"பேஷ் பேஷ்! சிந்தாமணி சொக்கிவிடுவாள் இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு" என்றார் ஐயர். "தமிழ் இனிமை எனும் பொருளுடைத்து" என்றார் புலவர் பெருமையுடன்.

"சிந்தாமணி நம்ம கோயில் தாசியாகிவிட்டால் பிறகு, கோயிலுக்குக் கூட்டம் ஏராளமாக வரும். வாரந்தோறும் ஓர் பிரசங்கம் செய்யலாம் நீர்" என்று களிப்புடன் கூறினார் ஐயர். புலவருக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது அந்தப் பேச்சு, இருந்தாலும் சகித்துக்கொண்டார்.