பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


அடையும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவ்வப் பொழுது நாம் கொண்டுள்ள மனோ நிலையே காரணமாகும். மனத்தின் போக்கும் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனம் பொருள்களின் நிலையைப் புறக்கணித்து இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. இவ்வாறு தொன்றுதொட்டு எத்தனையோ பொருள்களை நாம் அனுபவித்து வருகின்றோம். இவ்வாறு அனுபவிக்கும் பொழுது அப்பொருள்கள் நாம் அனுபவித்தவாறே தமது உருவங்களை நம் மனத்தில் செதுக்கி விட்டுப் போகின்றன. இதைத்தான் அறிஞர்கள் 'வாஸனை’ என்று குறிப்பிடுகின்றனர். நாம் வெளியில் ஒரு பொருளைக் காணும் பொழுது உள்ளே உறங்கிக் கிடக்கும் அப்பொருள்களைப் பற்றிய'வாஸனை' மலருகின்றது. குணநலன்கள் யாவும் மனத்தின் போக்கையொட்டியே இருக்கின்றன என்பது எண்ணிப் பார்த்தால் புலனாகும். எல்லாவற்றையும் இன்பமயமாக உணரும் நிலை மனத்திற்குக் கிட்டிவிட்டால் அதுவே கிடைத்தற்கரிய பேறாகும்.

நூலைக் கையிலெடுத்தவர்கள் எல்லோரும் சுவையில் ஈடுபட முடியும் என்று எண்ணுதல் தவறு. நன்றாக மனத்தைச் செலுத்திப் படித்து அடிக்கடி சுவைக்கும் இயல்பு கொண்டவர்களுக்கு மட்டிலும்தான் சிறிதளவு சுவை புலனாகத் தொடங்கும். இரத்தினம் ஓர் உயர்ந்த பொருள்தான் ; அதன் பெருமையை அனைவரும் அறிய முடிகின்றதா? இல்லையன்றோ ? அதன் தரத்தை ஆராய்ந்து பழகியவர்களுக்கு மட்டிலுந்தான் அதன் பெருமை புலனாகும்; இரங்கூன் கமலத்திற்கும் நல்ல இரத்தினத்திற்கும் உள்ள வேற்றுமை நன்கு தெரியும்.