124
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி
அவனும் கருணாகரனுடன் கலிங்கப் போருக்குச் சென்றனன் என்றும் ஆங்கு நடந்த போரொன்றில் வெற்றி பெற்றான் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுவர். அவ்வரலாறு உண்மையாக இருந்திருத்தால் அப்போருக்குச் சென்றிருந்த சேனாதிபதி உபசேனாதிபதிகளின் பெயர்களை[1] எடுத்துச் சிறப்பித்துக் கூறும் சயங்கொண்டார் அந்த இளவரசனைச் சிறப்பித்துக் கூறாததாலும், வேறு கல்வெட்டுச்சான்று இல்லாததாலும் அதை உறுதிப்படுத்தக் கூடவில்லை. ஆனல் விக்கிரம சோழனின்,
தெலுங்க வீமன் விலங்கன்மிசை யேறவும்
கலிங்க பூமியைக் கனலெரி பருகவும்
ஐம்படைப் பருவத்து வெம்படைத் தாங்கி
வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து
வடதிசை யடிப்படுத் தருளி
என வரும் மெய்க்கீர்த்தியுள் குறிப்பிடப் பெறும் கலிங்கப் போர் அபயன் கி. பி. 1095-6ல் மேற்கொண்ட தென்கலிங்கப் போரைக் குறிக்கும் என்று திரு. மு. இராகவய்யங்கார் குறிப்பிட்டுள்ளார்கள்.[2] இரண்டாம் முறையாக அபயன் நடத்திய வடகலிங்கப்போர் அவன் ஆட்சி முடிவிற்குச் சில ஆண்டுகட்கு முன் கருணாகரன் நடத்தியதாகும். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில்,
"ஏனைக் கலிங்கங்கள் ஏழனையும் போய்க்கொண்ட
தானைத் தியாக சமுத்திரமே[3]
என்று பாடியது முதற்கலிங்கப் போரையே குறிக்கும் என்பது திரு அய்யங்கார் அவர்களின் கருத்தாகும்.