உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி




கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலும் கமலம்
கொய்யும் மடவார் கண் வாய் அதரம்
கோபம் கமழும் தீபங் குடி.[1]

என்ற ஒரு பாடலில் அவரது ஊர் 'தீபங்குடி' என்ற செய்தி கிடைக்கின்றது. ஆனால் தீபங்குடி என்ற பெயருடன் தொண்டை நாட்டில் ஓருரும் சோழ நாட்டில் ஓருரும் உள்ளன. தஞ்சைமாவட்டத்துக் கல்வெட்டொன்று "இளங்கா நாட்டுத் தீபங்குடி” என்று ஓர் ஊரைக் குறிக்கின்றது.[2] இவற்றுள் சயங்கொண்டார் எந்த ஊரைச் சார்ந்தவர் என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும், இவர் முதற் குலோத்துங்கனைச் சிறப்பித்திருப்பதால் சோழநாட்டுத் தீபங்குடியினர் என்று கோடல் பொருந்தும்.

சமயம்

இவர் எச்சமயத்தைச் சார்ந்தவர் என்பதையும் நிச்சயிக்கக் கூடவில்லை. 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்[3] என்ற திருவாய் மொழிப்படி இவர் குலோத்துங்கனைத் திருமால் அவதாரம் என்று கூறுகின்றனரேனும்,[4] இவரை வைணவர் என்று கொள்ள இயலாது. கலிங்கத்துப் பரணியிற் கூறப்பெற்றுள்ள,


  1. தமிழ் நாவலர் சரிதை-செய் 117. இப்பாடல் தீபங்குடிப் பத்தென்னும் நூலில் சில பாட வேறுபாட்டுடன் மூன்றாவது பாட்டாகவுள்ளது.
  2. A. R. No. 28 of 1917
  3. திருவாய்மொழி நாலாம்பத்து.செய்.8,
  4. தாழிசை,232,