பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


வழக்கு பற்றியது ; அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராயிற்று ” என்று கூறுகிறார்.

பரணி என்ற பெயர்க் காரணம்

பரணி என்ற பெயர்க் காரணம் பலவாறாகக் கூறப் பெறுகின்றது. டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்கள் பரணி என்ற நாள்மீன் காளியையும் யமனையும் தன் தெய்வமாகப் பெற்றது என்றும் அந்நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கும் பெயராக வந்தது என்றும் அவ்வாறு கொள்வதே ஏற்புடைத்து என்றும் கூறுகிறார்கள். இதற்கு

காடு கிழவோள் பூத மடுப்பே
தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப்
பாகு பட்டது பரணிநாட் பெயரே.

என்னும் திவாகரத்தையே அவர்கள் ஆதாரமாகக் கொண்டார்கள். திரு. அய்யர் அவர்களின் கொள்கையை நாமும் அப்படியே ஒப்புக் கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில் தொடர்நிலைச் செய்யுட்களின் இலக்கணமாக அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற எட்டுவகை வனப்புக்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் விருந்து என்பதை,

விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே.[1]

என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இளம்பூரணர் " "விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறி


  1. தொல் பொருள் செய்யுளி.சூ 231.