பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


தல், நரிகள் ஊளையிடுதல், வேள்வித்தீ சுடலைத்தீ போல் நாறுதல், பூமாலைகள் ஒளியிழத்தல், ஓவியங்களில் வியர்வை நீர் தோன்றுதல், தடாகத்தில் இரத்தம் மாறுதல் ஆகியவை அது கண்ட தீ நிமித்தங்களாம்.

அவற்றைக் கேட்ட காளிதேவி கணிதப்பேய் நனவிலும் கனவிலும் கண்டதைக்கூறி ஒரு பரணிப் போர் நடைபெறப் போவதாக உரைக்கின்றாள். பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன.

போர்க்களத்தில் கூழ் சமைத்தல்

முதுபேயின் வேண்டுகோளுக் கிணங்க காளி தேவி தன் பேய்க்கூட்டங்களோடு போர்க்களத்துக்குச் சென்று அங்குள்ள காட்சிகளை ஒவ்வொன்றாக தம் பேய்களுக்குக் காட்டுகின்றாள். பிறகு அவைகளைக் கூழடுமாறு ஆணையிடுகின்றாள்.

முதலில் பேய்கள் காலைக்கடன்கள் செய்து முடிக்கின்றன. யானைகளின் மருப்பால் பல்லை விளக்கி அவற்றின் பழு எலும்பால் நாக்கை வழித்துக்கொள்கின்றன. கூரிய அம்புகளால் நகங்களைக் களைந்து யானையின் மத நீராகிய எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு வெண்மூளையாகிய களிமண்ணைக்கொண்டு நன்றாகத் தேய்த்து குருதித்தடாகத்தில் நீந்தி விளையாடுகின்றன. குளித்தபிறகு நிணத் துகில் உடுத்திப் பல்வேறு அணிகளைப் புனைந்து கொள்ளுகின்றன.

பிறகு கூழடுதல் தொடங்குகின்றது. பருந்து நிழற்பந்தலின் கீழ் யானைப் பிணங்களின்மேல்