உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றுக் கருவூலம்

57


நிறுத்துவதால் அதிலுள்ள செய்திகள் யாவும் 'உயர்வு நவிற்சி’யாகவே இருக்கின்றன. சோழர் வரலாற்றை நாரதன் உரைப்பதாகவும், அதைக் கரிகாலன் இமயத்தில் பொறித்து வைப்பதாகவும் அதை ஒரு முதுபேய் கற்றுவந்து காளிக்கு உரைப்பதாகவும் நூல்கூறுகின்றது. அதுபோலவே, அவதாரம் என்ற பகுதியில் பாட்டுடைத் தலைவனுகிய முதற் குலோத்துங்கனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி கற்றல் படைக்கலப் பயிற்சி, முடிபுனைதல் முதலிய செய்திகள் விரித்துப் பேசப்பெறுகின்றன. குலோத்துங்கன் திருமாலின் அவதாரமாகவே பேசப்படுகின்றான்.

அன்றிலங்கை பொருதழித்த அவனே அப்
     பாரதப்பேரர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன்
     எனஉதித்தான் விளம்பக் கேண்மின்[1]

[ ஆழி-சக்கரம், ஆணைச்சக்கரம்; விசயதரன்-குலோத்துங்கன் ]

என்று முதுபேயின் வாயில் வைத்துக் குலோத்துங்கன் வரலாற்றைக் கூறத் தொடங்குகிறார் கவிஞர். இலக்கியமாதலால், அப்பகுதியிலுள்ள செய்திகள் கற்பனை நயம் செறிய உயர்வு நவிற்சிகளாகவே உள்ளன. என்றாலும், உண்மையான வரலாற்றுக் குறிப்புக்கள் தெளிவாக இல்லாமல் இல்லை. அவற்றைத் தவிர 'காளிக்குக் கூளி கூறியது' என்ற பகுதியில் குலோத்துங்கனின் திருவோலக்கச் சிறப்பு, அவன் கலிங்கநாட்டின் மீது படை எடுத்தற்குரிய காரணம், படைகள்


  1. தாழிசை-232