பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


தொடக்க ஆண்டுகள் பன்னிரண்டை, அந்நாட்டில் அமைதியை நிலை நாட்டும் அரும்பணிக்கே செலவிட்டான். அவற்றுள் ஒரு சிலவே தன் பாட்டன் சந்திரகுப்தனால் கைப்பற்றப்பட்டன; எஞ்சிய நாடுகளெல்லாம் அவன் தந்தை பிந்துசாரன் ஆட்சியில் இறுதி நாட்களிலேயே வென்று கொள்ளப் பட்டனவாதலின் அந்நாட் டு மக்களை மகதத்தின் ஆணைக்கு அடங்கியவர்களாக ஆக்க அத்தனை ஆண்டுகளைச் செலவிட வேண்டியதாகி விட்டது; அதைத் திறம்பட முடித்து வெற்றி கண்ட அசோகன், பாடலிபுரத் தலைநகரில் தன் அரண்மனையின் மேன்மாடியில் நின்று, தன் தாள் பணிந்து கிடக்கும் தன் பேரரசைத் தலை நிமிர்ந்து நோக்கினான். உமையொரு பங்கன் வீற்றிருக்கும் இமயப் பெருவரையின் அடி முதல், மாலவன் வீற்றிருக்கும் வேங்கடத்தின் முடிவரை பரந்து கிடக்கும். அதைப் பார்த்துப் பெருமிதம் கொண்டான்; ஆனால் அந்தோ! அம்மகிழ்ச்சி சிறிது நாழிகைக்கெல்லாம் மறைந்து விட்டது; இவ்வாறு பரந்து அகன்ற ஒரு பெரு நாட்டை ஆளும் தனக்கு அடங்காது தன்னரசு செலுத்தும் சின்னஞ்சிறு தமிழகமும், தென்கலிங்கமும் அவன் கண்ணில் பட்டு அவன் கருத்தைக் குருடாக்கின; என் பேரரசின்முன் இவை தனியரசு செலுத்துவதா என்று எண்ணிப் பெருமூச்செறிந்தான். அவற்றையும் தன் ஆணைக் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று துணிந்தான்.

அசோகன் போர்க் கண்கள் தமிழகம், தென்கலிங்கம் ஆகிய இரண்டின் மீதும் ஒரு சேரவே வீழ்ந்தன என்றாலும், கலிங்க வெற்றியையே முதலில் கருதினான். தமிழகம் தன் அரசின் எல்லைக்கு அப்பால் தனித்துக் கிடக்கிறது, மேலும், அது தன் தந்தை கொண்டு சென்ற மௌரியப் பெரும் படையை வென்று துரத்த வல்ல தோளாற்றல் பெற்றுளது. மேலும், மததத்தின் அரியணையில் தந்தையினும் ஆற்றல் மிக்க தான் அமர்ந்திருப்பதை அறியும் அது.