பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70

முடிவை மேற்கொண்டுள்ளனர்; வடமொழிப் புலவர் பில்ஹணரின் விக்கிரமாதித்தன் வரலாற்று நூல், அதிராசேந்திரன் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று கூறுகிறது. உள் நாட்டுக் குழப்பம் ஒரு புறமும், அந்நாள்வரை சோழர் ஆணைக்கு அடங்கியிருந்த குறுநிலத் தலைவர்களின் கலகம் ஒருபுறமும் தலைதூக்கச் சோணாட்டில் அமைதி குலைந்துவிட்டது: அறநெறி ஆட்சி அழிந்துவிட்டது என்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் கூறுவதால், வடமொழிப் புலவர் கூற்றில் உண்மையுளது என்று சில வரலாற்றாசிரியர் வாதிக்கின்றனர். அதிராசேந்திரனின் பெரிய தந்தையாகிய இரண்டாம் இராசேந்திரனுக்கு மக்கள் அறுவர் இருந்தனர்; அமர் புரிவதிலும், ஆட்சி நடத்துவதிலும் அவர்கள் வல்லவர் என்ற வரலாற்று உண்மை, அவ்வாதத்திற்குத் துணை புரிவதாகவும் உளது.

சோழர்குலக் கடவுளாம் அம்பலவாணன் அருள் நடம் புரியும் தில்லையில், சித்திரக்கூடத்தில் இருந்த திருமாலின் திருவுருவைப் பெயர்த்துக் கடலில் எறிந்தும், திருமால் அடியார்களைத் துன்புறுத்தியும் வைணவ மதத்தை வேர் அறுக்கப் பண்ணினான் அதிராசேந்திரன்; வைணவத்திற்கு அவன் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு கலங்கிய அம்மத ஆசிரியராகிய இராமாநுசர் தமிழகத்தை விட்டு வெளியேறி மைசூர் நாடு சென்று தலைமறைந்து வாழ்ந்தார்; அக்காலை, அவர் செய்த மாரண மந்திரத்தினாலேயே அதிராசேந்திரன் மாண்டான் என வைணவ நூல்கள் கூறுகின்றன. வடமொழிப் புலவரின் வரலாற்று நூலினும், இவ்வைணவ நூல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன என்ற கருத்து சில வரலாற்றாசிரியர்களிடத்தில் வலுப்பெற்று விளங்குகிறது.

அதிராசேந்திரன் இறந்தமைக்குச் சோணாட்டில் நிகழ்ந்த உள்நாட்டுக் குழப்பமோ, வைணவமத விரோ