பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


அப்புதரிடைச் சிக்குண்டு அரை ஆடை கிழிந்து போகத் தலைமயிர் பறிப்புகண்டு போக, நின்ற சில மயிரையும் நீக்கிவிட்டு, “அமணர் நாங்கள்; அடித்து அழிக்காதீர்கள்” என்று கூறிச் சில கலிங்கர் பிழைத்துச் சென்றனர்; வில் நாணை முந்நூலாக மார்பில் அணிந்து “அந்தணர் யாம்; கங்கை ஆடப் போந்து அகப்பட்டுக் கொண்டோம்” என உரைத்து உயிர் பிழைத்தார் ஒரு சிலர். குருதிக் கறை, படிந்து காவி நிறம் பெற்ற கொடிச் சீலைகளால் உடலை மறைத்துக் கொண்டு, “சாக்கியச் சந்நியாசிகள் யாம்: எம் ஆடை அதை உமக்கு அறிவிக்கவில்லையோ” எனக் கூறியவாறே களத்திலிருந்து மறைந்து விட்டார்கள் மற்றும் சிலர். யானை மணிகளைக் கையிற் கொண்டு, “பாடிப் பிழைக்கும் பாணர்கள் யாம். களக்கொடுமை கண்டு கலங்கி நிற்கின்றோம்” எனக் கூறிப் பிழைத்தார் கணக்கற்றோர். கலிங்கப் படையின் நிலை இது.

படை புற முதுகிட்டு ஓடி விட்டது எனக் கேட்ட கலிங்கக் காவலன், சோணாட்டுப் படைவீரர் புக மாட்டா இடம் சென்று ஒளிந்து கொண்டான்: கருணாகரன் கலிங்க நாட்டார் களத்தில் விட்டுச் சென்ற வேழ வரிசைகளையும், விரைந்தோட வல்ல குதிரைக் கூட்டத்தையும், நெடிய பெரிய தேர்களையும், உயர்ந்த ஒட்டகங்களையும், நவநிதிக் குவியல்களையும், நங்கையர் திரளையும் கைப்பற்றிக் கொண்டான். இவ்வாறு களப்போரில் வெற்றி கொண்ட பின்னர், குலோத்துங்கன் படைத் தலைவன், அனந்தவன்மன் அடங்கியிருக்கும் மலையைச் சூழ, வில்லாலும், வாளாலும் அரண் அமைத்து, விடியும் வரைக் காத்திருந்து, காலை வந்துற்றதும், அக்கலிங்கனைக் கைப்பற்றிச் சிறை செய்து கொண்டு சோணாடு வந்து சேர்ந்தான். வெற்றி பெற்று வந்த வண்டையர் கோவுக்கு, குலோத்துங்கன் வரிசைகள் பல வழங்கி வாழ்த்தினான். பாடற் பொருளாகக் கொண்டு, “பரணிக்கோர் சயங் கொண்டார்” என்ற பாராட்டினுக்