ராணி
251
இசை விருந்து நின்ற பிறகு இரவு நெடுநேரத்திற்குப் பிறகு, கலிங்கராணியும், கலிங்கத்தை வென்ற வீரமணியும், அரண்மனை நந்தவனத்திலே ஆடிப்பாடிக் கொண்டிருக்கையிலே,
"உனக்கென்னம்மா உல்லாசத்துக்குக் குறை! பாண்டிய நாடு தகப்பன் தரணி—மலர்புரி, தாய் நாடு—சோழ நாடு வளர்ப்புத் தந்தையூர்—கலிங்கமோ, உனக்கே சொந்தம்" என்று வீரமணி கேலி பேசினான்.
"போ, கண்ணாளா! வீரம் உம்முடையது; விருது எனக்குக் கிடைத்தது. ஆனால் அன்று, நான் முதன் முதலாக என் தாயை, மலர்புரி அரசியைச் சந்தித்தேனே, நமது திருமணத்திற்கு முன்தினம்! அன்று நாங்கள் இருவரும் அழுத கண்களின் சிவப்பு என்றுமே மாறாது. உலகுக்கு நாங்கள் வேறு வேறுதானே! இதுபோல எங்கு உண்டு? தாயை மகள் அறியாமல் எத்தனை காலம் தவித்தாள்; அறிந்த பிறகும் பிரிந்தே வாழ்ந்தாள் என்று உலகம் கூறாதோ? என்ன வாழ்வு இது! அன்று என் அன்னை என்னை அணைத்து உச்சிமோந்து முத்தமிட்டபோது, எனக்கு இரு கண்களிலும் நீரருவி கிளம்பிற்று. இன்றும் அதனை எண்ணினால் என்னால் துக்கத்தை அடக்க முடியவில்லை" என்று நடனா சோகத்துடன் கூறினாள்.
உடனே, வீரமணி கொஞ்சினான் :
"கலிங்கராணியாரே! சோகத்தைப் போக்க மருந்துண்டு தெரியுமோ" என்று வீரமணி வேடிக்கையாகக் கேட்டான். அப்படிக் கேட்டுவிட்டு, 'ஊம். . . . . .இப்போது கண்களை மூடிக்கொள்' என்று கெஞ்சினான். கலிங்கராணியின் கண்களும் மூடின. அப்போது துடித்துக்கொண்டிருந்த வீரமணியின் இதழ் நடனாவின் கனியிதழைக் கவ்வியது!
முற்றிற்று