உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கலிங்க

மாற்றுக் குறைந்தவரல்லர்" என்று நடனம் பதிலுரைத்தாள். கங்கா கலகலவெனச் சிரித்துக் கொண்டே 'அவர் மாற்றுக் குறையாதவர்தான். ஆனால்..." என்று இழுத்தாள். "நான் மாற்றுக் குறைந்தவள் என்று கூறுகிறாயா?" என்று நடனம் கோபக்குறியுடன் கேட்கவே, அம்மங்கை மீண்டும் அமளி வந்துவிடப் போகிறதென்று அஞ்சி "கங்கா! என்ன இருந்தாலும் உனக்கு வாய் துடுக்குத்தான்" என்று கடிந்துரைத்துப் பாலாவின் வாயை அடக்கினாள்.

"ஆமாம். நான் ஒரு நாட்டியக்காரிதான். பரத்தையின் வளர்ப்புப் பெண். இதைத்தானே நீ குறிப்பிட்டாய். இதுதானே என் மாற்றுக் குறைவு? பேஷ்! கங்கா! என் பிறப்புக்காக நான் வெட்கப்படவில்லை. என் நடனத்திற்காக நான் வெட்கப்படத் தேவையில்லை; என் நிலைக்காக நான் நாணிடவும் வேண்டியதில்லை. என்னை நான் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறேன். நீ உன்னை யார் என்று தெரிந்துகொள்" என்று அதிகக் கோபத்துடன் பேசிவிட்டு "தேவி! இன்று முதல் நான் வெளியே விடுதி ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறேன். உத்திரவு தரவேண்டும்" என்று அம்மங்கையைப் பணிவோடு கேட்க அம்மங்கை திகைத்து நிற்கையிலே, "ஆமாம், தனி ஜாகை அவசியந்தான் உனக்கு. சதிகாரர்கள் கூடிட இரகசிய இடம் வேண்டாமோ?" என்று பாலா கூறினாள்.

"என்னடி உளறுகிறாய்" என்று அம்மங்கை அதட்டினாள். பயந்தவள்போல் பாலா பாசாங்கு செய்து கொண்டு, "மன்னிக்க வேண்டும். கோபத்தால் ஏதோ கூறிவிட்டேன். நான் அதைக் கூறியிருக்கக்கூடாது; என் மனதிலேயே போட்டு வைத்திருக்க வேண்டியதைக் கொட்டிவிட்டேன். அதைத் தயவுசெய்து மறந்து விடுங்கள்," என்று கூறினாள். அம்மங்கை ஒன்றும் புரியாமல் பாலாவின் கரத்தைப் பிடித்திழுத்துக் கடுங்கோபத்துடன், "விளையாடாதே! உண்மையை ஒளிக்காதே! சதிகாரர் என்று யாரைக் கூறினாய்? நடனாவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இப்போதே